தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விக்கிரவாண்டி வி. சாலையில் நடைபெற்று முடிந்திருக்கிறது.
இந்த மாநாட்டில் பேசிய கட்சியின் தலைவர் விஜய், திராவிடமும், தமிழ் தேசியமும் இரு கண்கள் என்று விஜய் கூறினார்.

இந்த நிலையில், விஜய் இவ்வாறு கூறியதில் தன்னைக்கு உடன்பாடு இல்லை என சீமான் கூறியிருக்கிறார். செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்த சீமான், “திராவிடம், தமிழ் தேசியமும் தம்பி சொல்வது எங்கள் கொள்கைக்கு நேரெதிரானது. திராவிடம், தமிழ் தேசியமும் ஒன்றல்ல. இரண்டும் வெவ்வேறானது. இது என் நாடு, என் தேசம். இங்கு வாழும் மக்களுக்கான அரசியல் தமிழ் தேசிய அரசியல்.
தெலுங்கு தேசம் என்று என்.டி. ராமராவ் பெயர் வைத்தபோது யாரும் எதிர்த்துப் பேசவில்லை. நாங்கள் தமிழ் தேசியம் என்று வைக்கும்போது அதைப் பாசிசம், பிரிவினைவாதம் என்கிறீர்கள். எனவே எங்கள் இருவரின் கொள்கையும் ஒன்றல்ல. எங்களுக்கு மொழிக் கொள்கையிலும் முரண்பாடு இருக்கிறது. எங்கள் தாய்மொழிதான் எங்களுக்குக் கொள்கை மொழி.

எங்களுக்கு மட்டுமல்ல, அனைத்து மொழிவழி தேசிய இனத்துக்கும் அந்நிய மொழி கொள்கை மொழியாக இருக்கமுடியாது. கெடுவாய்ப்பாக ஆங்கிலேயர் நம்மை ஆண்டதால் இணைப்பு மொழியாக ஆங்கிலம் நமக்குத் தேவைப்படுகிறது. அதைக் கற்றுக்கொள்ளலாம். என் பயணம் என் கால்களை நம்பிதான். தனித்துதான் போட்டியிடுவேன். யாரோடும் கூட்டணி இல்லை. என் பாதையும், அவரின் பாதையும் வேறு.” என்று கூறினார்.
