இப்படியென்றால், சனிக்கிழமை ஒட்டுமொத்தமாக 30 விமானங்களுக்கும், ஞாயிறன்று 25 விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது என்றால், விமான நிறுவனங்கள் சந்தித்திருக்கும் நஷ்டம் எத்தனை கோடிகள் என்று கணக்கிட்டால்.. நிச்சயம் துல்லியமாகக் கணக்கிட முடியாது, தோராயமாகக் கணக்கிட்டால் ஒரு விமான நிறுவனத்துக்கு ரூ.50 முதல் 80 கோடி என சொல்கிறது கால்குலேட்டர்.
ரூ.3 கோடி என்பது சாதாரண நிகழ்வுகள்.. அதுவே..
இதெல்லாம் மிகப்பெரிய நகரங்களில் விமானங்களை அவசரமாக தரையிறக்கும்போதுதான். இதுவே, பெரிய அளவில் வளர்ச்சியடையாத நகரங்களில் இருக்கும் விமான நிலையங்கள் என்றால் நிலைமை சற்று கவலைக்கிடம்தான். உதாரணமாக தில்லியிலிருந்து சிகாகோ செல்லவேண்டிய ஏர் இந்தியா விமானம் 200 பயணிகளுடன் கனடாவின் இகுவாலூயிட் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. அங்கிருந்த பல மணி நேரத்துக்குப் பிறகு, கனடாவின் விமானப் படை விமானம் மூலம் பயணிகள் சிகாகோவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதற்கான கட்டணத்தை ஏர் இந்தியா கனடா விமானப் படைக்குச் செலுத்த வேண்டும். வெடிகுண்டு மிரட்டலால் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம், மூன்றரை நாள்களுக்குப் பிறகு சிகாகோவிலிருந்து பயணிகள் இல்லாமல் காலி விமானமாக சிகாகோ சென்று, அங்கிருந்து மீண்டும் பயணிகளுடன் தில்லி திரும்புகிறது. இதனால், சுமார் 4 நாள்கள் விமானம் ஒன்று இயக்கப்படாமல் இருப்பதற்கான செலவு மற்றும் அது ஒரு விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதற்கான வாடகை என அனைத்தையும் ஏர் இந்தியா செலுத்த வேண்டும்.
ஒரு போயிங் வகை விமானத்தின் மாத வாடகை என்பது 4 லட்சம் டாலர் முதல் 6 லட்சம் டாலர். அப்படியென்றால், ஒரு நாள் வாடகை 17 ஆயிரம் டாலர்கள். ஒரு நாள் ஒரு விமானம் இயக்கப்படாமல் தரையில் நின்றிருந்தால், 17 ஆயிரம் டாலர்கள் நஷ்டம்.
ஒருவேளை, இந்த விமானம் திட்டமிட்டபடி சிகாகோ சென்றிருந்தால், சில மணி நேரங்களில் பயணிகளுடன் தில்லி வந்திருக்கும். ஆனால், பயணிகள் இகுவாலூயிட்டில் இறக்கப்பட்டனர். அங்கு எந்த வசதியும் இல்லை. அடிப்படை வசதிகள் எல்லாமே தொலை தூரத்திலிருந்து வரவழைத்துக் கொடுக்கப்படவேண்டும். இதில், கனடா விமானப் படை விமானங்கள் வேறு பயன்படுத்தப்பட்டதால், இந்த ஒரே ஒரு வெடிகுண்டு மிரட்டலுக்கான விலை ரூ.15 முதல் 20 கோடி என்கிறது தரவுகள்.
விமான நிறுவனங்களுக்கு எதிரான பொருளாதார தாக்குதலா?
ஏற்கனவே கரோனா பொதுமுடக்கத்தால் பொருளாதாரத்தில் அடிவாங்கிய விமான நிறுவனங்கள் இப்போதுதான் மீண்டும் எழுந்து நிற்கத் தொடங்கியிருக்கும் நிலையில், இந்த வெடிகுண்டுமிரட்டல் சம்பவங்கள், நிறுவனங்களுக்கு எதிரான பொருளாதார தாக்குதலாகவே பார்க்கப்படுகிறது.
முன்பெல்லாம் எப்போதோ ஒரு முறை மிரட்டல் விடுக்கப்படும். அப்போதும் கூட அவசர தரையிறக்கம் நடக்காது, எங்கு இறங்க வேண்டுமோ, அந்த விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை செய்யப்படும். ஆனால், அற்போது அவசர தரையிறக்கம் மற்றும் எரிபொருள் வீணாவது போன்றவை நிலைமையை மோசமாக்கியுள்ளன.
ஒரு விமானத்தை எரிபொருளை காலி செய்வதற்காக வானத்தில் வட்டமிட வைப்பதால், அதே விமானியைக் கொண்டு மீண்டும் விமானத்தை இயக்க முடியாமல் போகிறது. அது மட்டுமல்லாமல், தொடர்ச்சியாக அடுத்தடுத்து விமானங்களைப் பிடிக்க முடியாமல் போன பயணிகள் நீதிமன்றம் வரை சென்று இழப்பீடு கோருவார்கள். அவர்களது நஷ்டத்தையும் நாங்கள்தான் ஈடுகட்ட வேண்டும் என்கிறார்கள் விமான நிறுவன ஊழியர்கள்.
