2015-16, 2016-17, 2017-18 ஆகிய நிதியாண்டுகளுக்கு காலியான குருப் 4 பணியிடங்களுக்கு 2017-ல் தேர்வானவர்கள் 11,949 பேர். 2018-19, 2019-20 ஆகிய நிதியாண்டுகளுக்கு காலியான குருப் 4 பணியிடங்களுக்கு 2019-ல் தேர்வானவர்கள் 9684 பேர். 2020-21, 2021-22, 2022-23 ஆகிய நிதியாண்டுகளுக்கு காலியான பணியிடங்களுக்கு 2022-ல் தேர்வானவர்கள் 10,139 பேர். இதன்படி பார்த்தால், ஒவ்வொரு நிதியாண்டுக்கும் சராசரியாக 3,972 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
ஆனால், இப்போது 2023-24, 2024-25 ஆகிய நிதியாண்டுகளுக்கு காலியான இடங்களை நிரப்ப 8,932 பேர்களை தேர்வு செய்ய போகிறோம். இது முந்தைய சராசரி அளவான 3,972விட அதிகம். அதாவது சராசரியாக 4,466 பேர்கள் இப்போது தேர்வு செய்யப்படுவார்கள். இங்கே இன்னொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். முந்தைய அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர் பணி ஓய்வு வயது 58-ல் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டது. ஆனாலும் கூட முந்தைய ஆண்டுகளைவிட அதிக எண்ணிக்கையில்தான் பணியார்களை தேர்வு செய்கிறது டி.என்.பி.எஸ்.சி.

’இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விஷயத்தில் தமிழக அரசு காட்டும் அக்கறையின்மை கண்டிக்கத்தக்கது’ என சொல்லியிருக்கிறார் அன்புமணி ராமதாஸ். இளைஞர்கள் மீது அக்கறை கொண்டதால்தான், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த மூன்று ஆண்டுகளில் அரசுத் துறைகளில் 68,039 இளைஞர்களுக்கும், தனியார் நிறுவனங்களில் 5,08,055 இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்தியா மட்டுமல்ல, உலகின் பெரிய நிறுவனங்களும் முதலீடு செய்யும் முகவரியாக தமிழ்நாட்டை திமுக அரசு மாற்றியதால்தான் கடந்த 3 ஆண்டுகளில் 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகளை ஈர்த்து, 31 லட்சம் பேர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம்.

