மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்த மாதம் 20-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கு பா.ஜ.க தலைமையிலான ஆளும் மஹாயுதி கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை பல சுற்றுகள் நடந்துள்ளன. இரு கூட்டணிகளும் தசரா அன்று தொகுதி பங்கீடு அறிவிக்கப்படும் என்று அறிவித்து இருந்தன. ஆனால் சொன்னபடி இரு கூட்டணியும் தொகுதி பங்கீட்டை அறிவிக்கவில்லை.
தற்போது நடந்துள்ள பேச்சுவார்த்தையின் அடிப்படையில் மொத்தமுள்ள 288 தொகுதியில் 150 முதல் 160 தொகுதியில் பா.ஜ.கவும், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 70 முதல் 75 தொகுதியிலும், துணை முதல்வர் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 60 தொகுதியிலும் போட்டியிட திட்டமிட்டுள்ளன. ஆனால் எந்த தொகுதிகள் என்பதை முடிவு செய்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ்(அஜித் பவார்) மூத்த தலைவர் பிரபுல் பட்டேல் கூறுகையில்,”230 தொகுதிக்கு ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது. எஞ்சிய தொகுதிகளுக்கு விரைவில் தீர்வு எட்டப்படும்”என்றார்.

சிவசேனா(உத்தவ்) தலைமையிலான மகாவிகாஷ் அகாடி கூட்டணியிலும் தொகுதி பங்கீடு இழுபறியில் தான் இருக்கிறது. இதுவரை நடந்த பேச்சுவார்த்தையில் 230 தொகுதிகளுக்கு இக்கூட்டணி வேட்பாளர்களை இறுதி செய்துள்ளது என்கிறார்கள். எஞ்சிய தொகுதிகள் குறித்து ஒரு வாரத்தில் முடிவு செய்யப்படும் என்று காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். மொத்தமுள்ள 288 தொகுதியில் காங்கிரஸ் அதிக பட்சமாக 119 தொகுதியிலும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 86 தொகுதியிலும், சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி 75 தொகுதியிலும் போட்டியிட திட்டமிட்டு இருக்கிறது. சமாஜ்வாடி கட்சிக்கு 3 தொகுதியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதியும் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் 17ம் தேதி தனது முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் என்று மகாராஷ்டிரா எதிர்க்கட்சி தலைவர் விஜய் வடேட்டிவார் தெரிவித்தார். முதல்வர் பதவி தொடர்பாக யாரும் தேவையில்லாத கருத்துக்களை தெரிவிக்கவேண்டாம் என்று கட்சி தலைவர்களிடம் கேட்டுக்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் பலர், மீண்டும் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு தாவும் முடிவில் இருக்கின்றனர். அவர்கள் தொடர்ந்து சரத் பவாரை சந்தித்து பேசி வருகின்றனர். அஜித் பவார் கட்சி தலைவர்கள் சரத் பவாரை சந்திக்க வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அஜித் பவார் கட்சியை சேர்ந்த தலைமை செய்தித்தொடர்பாளர் உமேஷ்பாட்டீல், முன்னாள் எம்.எல்.ஏ.விலாஸ் லாண்டே, ஜுன்னார் எம்.எல்.ஏ. அதுல், அவரது சகோதரர் அமோல் ஆகியோர் புனேயில் சரத் பவாரை சந்தித்து பேசினர்.
அஜித்பவாரின் இளைய சகோதரர் ஸ்ரீனிவாஸ் பவாரும் சரத் பவாரை சந்தித்து பேசினார். ஸ்ரீனிவாஸ் பவாரின் மகன் யுகேந்திரா வரும் தேர்தலில் பாரமதி தொகுதியில் அஜித் பவாருக்கு எதிராக போட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரத் பவாரை சந்தித்து பேசுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சரத்பவார் தனது கட்சிக்கு வேட்பாளர்களை தேர்வு செய்வதிலும் தீவிரமாக இருக்கிறார்.

காங்கிரஸ் கட்சி தற்போது எம்.எல்.ஏ.க்களாக இருப்பவர்களில் 10 பேருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுப்பதில்லை என்று முடிவு செய்திருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் இந்த 10 எம்.எல்.ஏ.கள் மீதும் மக்கள் அதிருப்தியில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. அதேசமயம் வாய்ப்பு மறுக்கப்படும் எம்.எல்.ஏ.க்களுக்கு சட்டமேலவையில் வாய்ப்பு கொடுத்து அவர்களின் அதிருப்தியை சரி செய்யவும் கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. ஹரியானா சட்டமன்ற தேர்தல் போன்று மகாராஷ்டிரா தேர்தலில் கோட்டை விட்டுவிடக்கூடாது என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது. எனவேதான் ஒவ்வொரு பகுதிக்கும் தனியாக பார்வையாளர்களை நியமித்து தேர்தல் பணிகளை காங்கிரஸ் வேகப்படுத்தியுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.