தென்மேற்குப் பருவமழை முற்றிலுமாக விலகி வடகிழக்குப் பருவமழை நேற்று தொடங்கியிருக்கிறது. வங்கக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திராவை நோக்கி நகர்வதால், கடந்த இரண்டு நாள்களாக சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்துவந்த கனமழை நேற்றிரவு முதல் படிப்படியாகக் குறைந்தது. இருப்பினும், பள்ளிகரணை, வியாசர்பாடி, முல்லை நகர், பட்டாளம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழைநீர் தேங்கிய வண்ணம் இருக்கிறது.

மாநகராட்சி அதிகாரிகள் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். மறுபக்கம், மழைநீர் வடிகால் பணிகள் 90 சதவிகிதம், 95 சதவிகிதம் முடிந்துவிட்டதாக தி.மு.க அமைச்சர்கள் கடந்த காலங்களில் கூறியதைக் குறிப்பிட்டு ஆளும் அரசைப் பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், இன்னும் 30 சதவிகித மழைநீர் வடிகால் பணிகள் மீதமிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
பள்ளிகரணையில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், “மழைநீர் வடிகால் பணிகள் அரசுக்கு கைகொடுத்திருக்கிறது. கடந்த மூன்று மாதங்களாக இதற்கான பணிகளில் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம். ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் கமிட்டி அமைத்து பணிகளைச் செய்துவருகிறோம்.
ஒரேடியாக பணிகளை முடிக்க முடியாது. இன்னும் 25-லிருந்து 30 சதவிகித வேலைகள் மீதமிருக்கிறது. வரக்கூடிய காலகட்டங்களில் அதையும் முடித்துவிடுவோம். சென்னை மற்றும் அதனை ஒட்டியிருக்கின்ற புறநகர்ப் பகுதி மக்களுக்கு நிரந்தரமான தீர்வு நிச்சயமாகக் கிடைக்கும்” என்று தெரிவித்தார்.
