முரசொலி பத்திரிகையின் ஆசிரியராக, இதழியல் துறையின் நட்சத்திரமாக பரிணமித்த முரசொலி செல்வம் மறைந்துவிட்டார். மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் அக்காள் மகன், இந்நாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மைத்துனர் என்கிற அடையாளங்களையெல்லாம் தாண்டி, பத்திரிகை துறையில் தனக்கென ஒரு பாணியை கட்டமைத்துக்கொண்டு, தி.மு.க-வினர் மத்தியில் தனிச் செல்வாக்கை வளர்த்துக்கொண்டவர் முரசொலி செல்வம்.
1963-ல் சட்டப்படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, தி.மு.க-வின் அதிகாரபூர்வ பத்திரிகையான முரசொலியில் பணியாளராக சேர்ந்ததிலிருந்தே செல்வத்தின் பத்திரிகைப் பணி தொடங்கிவிட்டது. தி.மு.க தலைவர் கருணாநிதி சூட்டிய பன்னீர்செல்வம் என்கிற பெயர் மங்கிப்போய், “முரசொலி’ செல்வம் என்கிற அடைமொழியோடு வலம் வரத் தொடங்கினார். தொடக்கத்தில், முரசொலியில் வெளியாகும் பாக்ஸ் செய்திகளுக்கான பொறுப்பு அவரிடம்தான் அளிக்கப்பட்டிருந்தது. எம்.ஜி.ஆர் ஆட்சியில், திருச்செந்தூர் கோவில் அறங்காவல்துறை அதிகாரியாக இருந்த சுப்பிரமணிய பிள்ளை, கோவில் விடுதியில் மர்மமான முறையில் இறந்துகிடந்தது பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. அவர் கொல்லப்பட்டதாகப் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதி.

சுப்பிரமணிய பிள்ளையின் மர்ம மரணத்தை விசாரிக்க ஓய்வுப்பெற்ற நீதிபதி சி.ஜே.ஆர்.பால் தலையில் ஒருநபர் கமிஷனும் அமைக்கப்பட்டது. அந்த கமிஷனின் அறிக்கை அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரிடம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அறிக்கையின் நகல் ஒன்று கருணாநிதி வசம் கிடைத்தது. அறிக்கையிலுள்ள தகவல்களை பொதுவெளியில் வெளியிட்டார் அவர். அந்தச் சமயத்தில், ‘மிரட்டாதே முக்காடு போட்டுக்கொள்!’ என முரசொலியில் வெளியான செய்தியும், எம்.ஜி.ஆரைக் கூண்டில் ஏற்றியிருப்பதுபோல வெளியான கார்டூனும் பரபரப்பாகப் பேசப்பட்டன. அந்தப் பரபரப்பை தன் எழுத்தின் மூலமாக முரசொலியில் கிளப்பியவர்தான் முரசொலி செல்வம். வி.பி.சிங்கின் ஆட்சியில் முரசொலி மாறன் மத்திய அமைச்சரானதைத் தொடர்ந்து, முரசொலியின் முழுநேர ஆசிரியராகவும் மாறிப்போனார் செல்வம்.
