டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சிகிச்சையின்போது நோயாளிக்கு மரணம் ஏற்பட்டால் அது மருத்துவரின் கவனக்குறைவு அல்லது அலட்சியம் காரணமாக ஏற்பட்டது என்றும், எனவே, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 304 (A)-ன் (Causing death by negligence) கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற புகாரை குடும்ப உறுப்பினர்கள் காவல் நிலையத்தில் அளிக்கும்போது நிலைய அதிகாரி உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

அத்தகைய சூழ்நிலைகளில் சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரி வழக்குப் பதிவு செய்யும் முன், ‘முழுமையான விசாரணை நடத்தி அனைத்து விதமான வாய்மொழி மற்றும் ஆவண ஆதாரங்களைத் திரட்ட வேண்டும். மூத்த அரசு மருத்துவரிடம் குறிப்பாக, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவரிடமிருந்து வல்லுநர் கருத்து (Expert Opinion) பெற வேண்டும். இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 304 (A)-ன் கீழ் குற்ற செயல் உறுதி செய்யப்பட்டால், மேல் நடவடிக்கைக்கு முன் கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் சட்ட ஆலோசனை பெற வேண்டும்.
சிகிச்சையின்போது அலட்சியமாக நடந்து கொண்டதாக ஒரு மருத்துவரின் மீது குற்றம் சாட்டப்பட்டால் மற்ற வழக்குகளைப் போல் கைது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. வழக்குப் பதிவு செய்வதற்கு முன்பாக வழக்கில் தொடர்புடைய அனைத்து சாட்சிகளையும் சம்பந்தப்பட்ட மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும்.

வழக்கின் விவரங்கள், ஆதாரங்கள், சாட்சியங்கள் மற்றும் குற்றம் நடைபெற்ற சூழ்நிலை ஆகியவை தொடர்பான விரைவு அறிக்கையை (Express Report) காவல்துறை டிஜிபிக்கு வழக்குப்பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்துக்குள் அனுப்பப்பட வேண்டும்’ என்ற வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்த உத்தரவு மருத்துவர்களை காக்கும் நடவடிக்கையாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
இது குறித்து நம்மிடம் பேசிய சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் செயலாளர் ரவீந்திரநாத், “ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு இருக்கிறது. அதன் அடிப்படையில் தான் தற்போது உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள். அதில் உடனடியாக மருத்துவர்களை கைது செய்யக்கூடாது. உண்மையாக தவறு செய்திருக்கிறார்களா என்று விசாரணை மேற்கொள்ள வேண்டும். அப்போதும் போலீஸார் அதை முடிவு செய்ய முடியாது.

மருத்துவ வல்லுநரின் கருத்தை தான் பெற வேண்டும் என சொல்லப்பட்டிருக்கிறது. எனவே இந்த உத்தரவை நடைமுறைக்கு கொண்டுவரவில்லை என்றால், பெரிய பிரச்னை ஏற்பட்டுவிடும். மருத்துவர்கள் தவறு செய்துவிட்டால் நீதிமன்றம், நுகர்வோர் மன்றம் போன்றவற்றுக்கு பொதுமக்கள் செல்ல முடியும். அறுவை சிகிச்சையின் போது இருதய அடைப்பு ஏற்பட்டு நோயாளி இறந்துவிட்டால் மருத்துவர்கள் ஒன்றும் செய்ய முடியாது.
அதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மருத்துவ அறிவியல் படித்திருந்தாலும் அனைவருக்கும் ஒரே மாதிரி அதை செயல்படுத்த முடியாது. பொதுமக்களுக்கும் இந்த விஷயத்தில் விழிப்புணர்வு மிகவும் குறைவாக இருக்கிறது. தற்போது டெக்னாலஜி வளர்த்துவிட்டதால் மிகவும் அபாயகரமான கட்டத்தில் இருப்பவர்களை கூட மருத்துவர்கள் காப்பாற்றி விடுகிறார்கள்” என்றார்.

வி.சி.க துணைப் பொதுச் செயலாளர் கௌதம சன்னா பேசுகையில், “அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிலவற்றில் தற்போது இதுபோன்ற பிரச்னைகள் பெரிதாக நடந்துகொண்டிருக்கின்றன. இதற்கு அலட்சியம் மட்டுமே காரணம் என்று கூறமுடியாது. இதில் அறியாமையும் இருக்கிறது. எனவே எந்தவிதமான முன்நிபந்தனையும் இல்லாமல் அரசு அனைத்து மருத்துவர்களுக்கும் ஆலோசனை வழங்க வேண்டும்.
எமர்ஜென்சிக்கு முக்கியத்துவம் அழைக்கப்படுகிறது. சில நேரங்களில் அது தவறிப்போகிறது. அப்போது டாக்டர்களிடம் அறியாமை இருப்பது நிரூபணமாகிறது. சாதாரண மக்களால் இதை நிரூபிக்க முடியாது. ஏனெனில் அவர்களிடம் மருத்துவ அறிவு, மீண்டும் விசாரணை நடத்துவதற்கு பொருளாதாரம் இருக்காது. மேலும் டாக்டர்களும் அதற்கு ஒத்துழைக்க மாட்டார்கள்.

இந்தியாவில் மருத்துவர்களின் அறியாமையாலும், அலட்சியத்தாலும் உயிரிழந்தவர்களுக்கு நீதி பெரிதாக கிடைக்கவில்லை. நான் நேரடியாகவே மருத்துவர்களின் அலட்சியம், இறந்தவர்களை மூன்று நாள் மருத்துவமனையில் வைத்துக்கொண்டு பணம் பெற்ற சம்பவங்களை நேரடியாக சந்தித்திருக்கிறேன். நண்பர் ஒருவரை மருத்துவமனையில் அனுமதித்திருந்த பொழுது தினமும் ரூ.3,000-க்கு மருந்து எழுதி தருகிறார்கள்.
அதை தினமும் பயன்படுத்த முடியாது. இது ஒரு ஏமாற்று வேலை தான். இதை தடுக்க பொதுமக்களின் பங்களிப்போடு கட்டுப்படுத்த குழு அமைக்க வேண்டும். மருத்துவமனைகளில் நடக்கும் சிகிச்சைகளை கண்காணிக்க விஜிலென்ஸ் ஏற்படுத்த வேண்டும். அதில் நீதி, மருத்துவம், காவல்துறை பொதுமக்கள் இருக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற குற்றங்கள் தடுக்கப்படும்.

பெரும்பாலான பெரிய மருத்துவமனைகள் எவ்விதமான கண்காணிப்பும் இல்லாமல் இருக்கிறது. அவர்கள் சொல்வது தான் கட்டணம். கொரோனா காலத்தில் கூடுதல் விலைக்கு மருந்துகள், ஊசிகளின் விற்பனை செய்ததை பார்க்க முடிந்தது. இக்கட்டான நேரத்தில் மருந்துகளின் விலையை அதிகரிப்பது, கட்டணத்தை அதிகமாக உயர்த்துவது போன்றவற்றை தடுத்து நிறுத்த வேண்டும்.
ஒவ்வொரு சிகிச்சைக்கும் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற வழிகாட்டுதல்களை அரசு வெளியிட வேண்டும். சில மருத்துவமனைகள், மருத்துவர்கள் அடிக்கும் பகல் கொள்ளைக்கு கடிவாளம் போட, பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவுக்கு வசதி இல்லை. ஒரே படுக்கையில் பலரை படுக்க வைப்பது போன்ற சம்பவங்களையும் பார்க்க முடிகிறது. எனவே இதற்கு தீர்வு வழங்க வேண்டும் ” என்று கொதித்தார்.

இதுகுறித்து தி.மு.க செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் விளக்கம் கேட்டோம், “இது ஏற்கெனவே இருக்க கூடிய இந்திய மருத்துவ அமைச்சகத்தின் வழிகாட்டுதல்தான். புதிதாக நாம் கொண்டுவரவில்லை. மருத்துவர்கள் அவர்களது சேவையை செய்யும் பொழுது சில நேரங்களில் குறைபாடு ஏற்படலாம். பல நேரங்களில் நோயாளிகளுக்கு ஒன்று நடந்துவிட்டால் அவர்களுடன் செல்லும் கூட்டம் மருத்துவர் மீது குற்றம் சாடுவார்கள்.
எனவே தான் இதற்கான உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் இருக்கிறது. மருத்துவர்களின் கவனக்குறைவால் நடந்தது என்றால், அதை உறுதி படுத்திய பிறகு வழக்கு தொடருங்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதை தான் அவர் மீண்டும் தெரிவித்திருக்கிறார் ” என்றார்.

