ஈரோட்டில் மகிளா காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அக்கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ-வுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், செய்தியாளர்களிடம் பேசுகையில், “மதுவிலக்கை ஒரு மாநிலத்தில் மட்டுமல்ல இந்தியா முழுமைக்கும் அமல்படுத்த முடியாது. சேலத்தில் ராஜாஜி மதுவிலக்கை கொண்டு வந்தபோது அது சேலம் நகர அளவில்தான் இருந்தது. மற்ற இடங்களில் மது விற்பனை செய்யப்பட்டது. ஏன்? காங்கிரஸ் கட்சி ஆட்சிக்காலத்தில் கூட பர்மிட் முறையில் மது விற்பனை நடைபெற்றது. மதுக் கடையை மூடினால் பாதிக்கப்படுவோரில் முதல் ஆளாக நாம் தமிழர் கட்சியின் சீமான்தான் இருப்பார். தான் பாதிக்கப்பட்டுவிடக் கூடாதே என்ற அக்கறை அவருக்கு கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும்.
மக்கள் தாங்கள் செய்யும் தவறை உணர்ந்து திருந்தினால்தான் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த முடியும். மதுக்கடைகளை ஒரே அடியாக மூடினால் கள்ளச்சாராயம் பெருகும் ஆபத்தும் உள்ளது. ஏனென்றால் தமிழகத்தில் மது குடிக்கும் 80 சதவீதம் பேர் அதற்கு அடிமைகளாக உள்ளனர். மது குடிக்கவில்லை என்றால் அவர்களின் மனநிலையும், உடல்நிலையும் கெட்டுப் போய்விடும். மது பாதிப்பு குறித்து மக்களுக்கு எடுத்துரைத்துதான் மதுவை ஒழிக்க முடியுமே தவிர சட்டங்கள் போடுவதால் மதுவை ஒழித்துவிட முடியாது. புரண மதுவிலக்கு இருக்கும் குஜராத்தில் வீட்டுக்கு வீடு மது விற்பனை ஜோராக நடைபெறுகிறது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 10 சதவீத வாக்கு வங்கி குறைந்துவிட்டதாக கூறுகிறார். ஆனால், உண்மையில் அதிமுக-வில் இருந்த 30 சதவீத வாக்கு வங்கி சரிந்துவிட்டது. இதற்கு முழுக் காரணம் பாஜக-வுடன் அவர்கள் கூட்டணி வைத்துதான். நடிகர் விஜய் எல்லோர் வீட்டுப் பிள்ளையாக இருக்கிறார். அரசியல் கட்சி என்பது கொள்கையை வைத்துதான் தொடங்கப்படும். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை உண்டு. ஆனால், விஜய் எந்தக் கொள்கையை அடிப்படையாக வைத்து கட்சி தொடங்கி இருக்கிறார் என்று தெரியவில்லை.
அவரது கட்சிக் கொடியிலேயே ஏகப்பட்ட குழப்பங்கள் உள்ளன. இரண்டு யானைகள் கட்சிக் கொடியில் காலை தூக்கியவாறு நிற்கிறது. அதற்கு என்ன பொருள் என்று தெரியவில்லை. கொள்கைக்காத்தான் கட்சி ஆரம்பிக்க வேண்டுமே தவிர; கட்சியை ஆரம்பித்துவிட்டு கொள்கையை பின்னால் அறிவிப்பேன் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. இல்லையென்றால் பதவி ஆசையில் எம்எல்ஏ அல்லது எம்.பி பதவிக்குத்தான் கட்சி தொடங்குகிறேன் என வெளிப்படையாக விஜய் அறிவித்துவிட வேண்டும். விஜய்க்கு முன்னால் கட்சி தொடங்கிய நடிகர்கள் நிலை என்னவானது என்று அவர் புரிந்துகொள்ள வேண்டும். எதற்காக அவருக்கு தனிக்கட்சி. பேசாமல் காங்கிஸ் கட்சியில் விஜய் சேர்ந்துவிடலாம்” என்றார்.
