ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை மாநகரக் காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவு மோசடி வழக்கில் செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூட முன்வரவில்லை. அதுமட்டுமின்றி, அவரை திமுகவில் சேர்த்து அமைச்சராக்கி அழகு பார்க்கிறார். அவருக்கு தியாகி பட்டம் சூட்டி உருகுகிறார். திராவிட மாடல் வாஷிங் மெஷின் அந்த அளவுக்கு ஊழல் கரையே தெரியாத அளவுக்கு வெளுத்து எடுத்திருக்கிறது. அரசு வேலை தருவதாக பல்லாயிரக்கணக்கானோரிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள செந்தில் பாலாஜி தியாகி என்றால், அவரிடம் பணத்தைக் கொடுத்து தங்களின் சொத்துகளையும், வாழ்க்கையையும் இழந்து தவிக்கும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் என்ன துரோகிகளா? என்பதை முதலமைச்சர் தான் விளக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்பவர் ஏழரை கோடி தமிழ்நாட்டு மக்களுக்கும் பொதுவானவர். நடுநிலை தவறாத நீதிபதியாக இருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டியது தான் அவரது கடமை. ஆனால், அவரோ கடமையை மறந்து விட்டு மோசடி செய்தவருக்கு வழக்கறிஞராக மாறி அவருக்காக வாதாடிக் கொண்டிருக்கிறார். இது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.
செந்தில் பாலாஜியை முதலமைச்சர் வலிந்து வலிந்து ஆதரிப்பதையும், புகழ்வதையும் பார்க்கும் போது செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கு விசாரணை தமிழ்நாட்டில் நியாயமாக நடக்கும் என்றோ, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் என்றோ தோன்றவில்லை. எனவே, செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கின் விசாரணையை வேறு மாநில நீதிமன்றத்திற்கும் மாற்றும்படி உச்சநீதிமன்றத்திற்கு தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.
