பா.ஜ.க., ஆளும் உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில், ஆக்கிரமிப்புப் பகுதியில் கட்டப்பட்ட வீடுகள், கடைகள் என்று கூறியும், குற்றவாளிகளின் வீடுகள் என்று கூறியும், அந்தந்த மாநில அரசுகளே புல்டோசரை கொண்டு அவற்றை இடிக்கும் செயல்கள் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது.
இதில், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் `புல்டோசர் பாபா” என்று பிரபலமாக அழைக்கப்படுகிறார். மறுபக்கம், இதுபோன்ற புல்டோசர் நடவடிக்கையில் பாதிப்புக்குள்ளாகும் பெரும்பாலான வீடுகள், கடைகள் இஸ்லாமியர்களுக்குச் சொந்தமானவை.

இதனால், பா.ஜ.க., வேண்டுமென்றே சிறுபான்மையினருக்கு எதிராகச் செயல்படுவதாகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இவ்வாறிருக்க, புல்டோசர் நடவடிக்கைக்கு எதிரான பொதுநல வழக்கைச் சமீபத்தில் விசாரித்த உச்ச நீதிமன்றம், “ஒருவர் குற்றம்சாட்டப்பட்டவராக இருந்தாலே எப்படி அவரது வீட்டை இடிக்க முடியும். குற்றவாளியாகவே இருந்தாலும் கூட சட்டத்தைப் பின்பற்றாமல் அவரது வீட்டை இடிக்க முடியாது” என்று கண்டித்ததோடு, “கட்டுமானங்களை இடிப்பது தொடர்பாக முழு நாட்டுக்குமான ஒரு வழிகாட்டுதல் நெறிமுறைகள் வகுக்கப்படும்” என்று தெரிவித்தது.
