கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் இயங்கிவரும் மணல் ஆலைக்காக கிள்ளியூர் தாலுகா பகுதியில் மணல் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மணல் ஆலையால் புற்றுநோய் உள்ளிட்டவை அதிகரித்து வருவதாக கடற்கரை மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் நாகர்கோவிலில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மணவாளக்குறிச்சியில் 1965 -ம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் ஆட்சியில் மணல் ஆலை தொடங்கப்பட்டது. தற்போது இளைஞர்களுக்கும் மீனவர்களுக்கும் வேலை வாய்ப்பை வழங்கும் வகையில் நடக்க உள்ள மணல் ஆலை விரிவாக்க திட்டத்திற்கு அதே காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கியுள்ளது வேடிக்கையாக உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளூரில் யாருக்கும் வேலை கிடைக்க கூடாது என்ற எண்ணத்தில் விரிவாக்கத் திட்டத்தை காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது. மணல் ஆலையால் புற்றுநோய் தாக்குவதாக சொல்கிறார்கள். மணல் ஆலையில் பலர் வேலை செய்கின்றனர். இந்த மணல் ஆலைக்காக 75 சதவீதம் மீனவர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். ஐ.ஆர்.இ.எல் இருப்பதால்தான் புற்றுநோய் வருகிறது என்றால் மற்றவர்களுக்கு எப்படி வருகிறது. என் தாயார் புற்றுநோயால் மரணமடைந்தார். புற்று நோய் என்பது குணமாக்க முடியாத நோயாக இருந்தது. இப்போது அதற்கு மருந்துகள் கொண்டுவந்து ஓரளவு குணப்படுத்தும் அளவுக்கு வந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் கட்சியினர் இங்கு எந்தத்திட்டமும் வந்து விடக்கூடாது என நினைக்கிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வேலைக்காக வெளியூர் செல்ல வேண்டும் என இவர்கள் நினைக்கிறார்கள்.
