தமிழகத்தில் தொழில் துறை என்றாலே சென்னை, கோவை மண்டலங்கள்தான் என்று இருந்த நிலை இப்போது அது வெகுவாக மாறியிருக்கிறது. இன்றைக்கு எல்லாத் தொழில்களிலும் தென் மாவட்டங்கள் தங்களின் முத்திரையைப் பதித்து வருகின்றன. அந்த வகையில், மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள தொழில் வளர்ச்சியைப் பற்றி பார்ப்போம்…

பாரம்பர்ய நகரமான மதுரையில் சமீப காலமாகத் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களும் அதிகம் வரத் தொடங்கி யுள்ளன. மெட்ரோ ரயில் பணிக்கான ஆரம்பகட்ட வேலைகளும் தொடங்கியுள்ள நிலையில், புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கவும், தொழில்நுட்பம் சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களை மேம்படுத்தவும் தமிழக அரசு ஏழு ஏக்கர் பரப்பளவில் புத்தாக்கப் பயிற்சி மையத்தை ரூ.24 கோடி செலவில் உருவாக்க உள்ளது.
வடபழஞ்சியில் அமைந்துள்ள தமிழக அரசின் ஐ.டி பார்க்கில் அமெரிக்காவை சேர்ந்த டியோ நிறுவனம் ரூ.500 கோடி முதலீட்டில் மென்பொருள் தயாரிக்கும் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளது.மாட்டுத் தாவணியில் ரூ.350 கோடி செலவில் டைடல் பார்க் அமைக்கும் வேலைகளைத் தமிழக அரசு தொடங்கியுள்ளது. வாடிப்பட்டியில் 106 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஜவுளிப் பூங்காவிலிருந்து பல நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு ஜவுளிகளை ஏற்றுமதி செய்து வருகிறது.
மதுரை மாவட்டத்தில் சில்வர் பாத்திரப் பட்டறைகள், அரிசி ஆலைகள், பஞ்சாலைகள், ஆட்டோமொபைல் மற்றும் இன்ஜினீயரிங் தொழில், அரிசி, பருப்பு, தானியங்கள், அப்பளம், வடகம், சமையல் எண்ணெய், உணவுப்பொருள் உற்பத்தித் தொழில்கள், கைத்தறி, விசைத் தறி மூலம் வேட்டி, சுங்குடிச் சேலைகள், ரெடிமேட் ஆடைகள் உற்பத்தி, மண்பாண்டம் தயாரிப்பு, மலர் ஏற்றுமதி, சுற்றுலா என சிறு, குறு தொழில்கள் நிறைந்திருக்கின்றன. இவை இன்னும் பெரிய அளவில் வளர்ச்சி அடைவதற்குப் புதிய பொருளாதார மண்டலங்களைத் தமிழக அரசு உடனடியாக உருவாக்கினால் இன்னும் சிறப்பான வளர்ச்சி காணும்.
மதுரை மாவட்டத்தில் தற்போது ஹெச்.சி.எல், ஹனிவெல் உள்ளிட்ட சில ஐ.டி நிறுவனங்கள் வந்துள்ளன. அரசும் டைடல் பார்க் அமைக்கவுள்ளது. டி.வி.எஸ் டயர், பென்னர், மெஜுரா கோட்ஸ் தியாகராசர் மில் போன்ற தொழிற்சாலைகளைத் தாண்டி, இன்னும் பல பெரிய தொழிற்சாலைகள் மதுரை மாவட்டத்துக்குள் வரவேண்டும்.
மதுரையில் தற்போது ரியல் எஸ்டேட் தொழில் பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. மதுரையிலிருந்து அனைத்து மாநிலங்களுக்கும் செல்லும் நெடுஞ்சாலை வசதியும், ரயில் மற்றும் விமானப் போக்குவரத்தும் ஏற்கெனவே அமைந்துள்ளது. தூத்துக்குடி துறைமுகம் அருகில் உள்ளது. மனித வளமும் அதிகமாக இருப்பதால், சென்னை, கோவைக்குப் போட்டியாக மதுரையில் சிறப்பாகச் செயல்பட வாய்ப்புள்ளது’’ என்றனர்.
கப்பலூர் சிட்கோ தொழிற்சாலைகள் சங்கத் தலைவர் ரகுநாதராஜாவிடம் பேசிய போது, “மதுரை ஆரம்பக் காலத்திலிருந்தே பல தொழில்கள் சிறப்பாக நடந்த மாவட்டம். கப்பலூர், புதூர், உறங்கான்பட்டியில் உள்ள சிட்கோ தொழிற் பேட்டையில் பல சிறு குறு தொழில் நிறுவனங்கள் இயங்கி மதுரையின் வளர்ச்சிக்குப் பங்களித்து வருகிறது.
அடுத்து, சக்கிமங்கலத்தில் நான்காவது சிட்கோ அமைக்கப்படவிருக்கிறது. 110 பிளாட்டுகள் அமைக்கப்பட்டுள்ள அந்த சிட்கோவுக்கு 200-க்கும் அதிகமான தொழில் முனைவோர் விண்ணப்பித்துள்ளனர். அந்த அளவுக்கு தொழில் செய்ய இடம் கிடைப்பதில் சிரமம் உள்ளது.
மதுரையின் சிறு குறு தொழில் வளர்ச்சி அடைய வேண்டுமெனில், பெரிய தொழிற்சாலைகள் இங்கு வர வேண்டும். ஏற்கெனவே அறிவித்த மதுரை-தூத்துக்குடி இண்டஸ்ட்ரியல் காரிடரை நடைமுறைப்படுத்த வேண்டும்” என்றார்.
மதுரையின் தொழில் வளர்ச்சி விரிவாக விமான நிலையம் விரிவாக்கம் அவசியம். வாடிப்பட்டியிலிருந்து சிட்டம்பட்டி வழியாக கொல்லம் சாலையை இணைக்கும் வழியாக புதிய ரிங் ரோடு அமைக்க இருக்கிறார்கள். இந்த வேலை சீக்கிரம் செய்து முடித்தால், மதுரையின் தொழில் வளர்ச்சிக்குப் பேருதவியாக இருக்கும்.

மதுரை – நத்தம் நெடுஞ்சாலை மூலம் திருச்சிக்குச் செல்லும் பயண தூரம் 25 கிலோ மீட்டர் குறைத்துள்ளது தொழில் துறையினருக்கு பேருதவியாக இருக்கிறது. மாட்டுத்தாவணி அருகே டிட்கோ மூலம் டைடல் பார்க், கொட்டாம்பட்டி அருகே தொழில் நகரம் அமைக்கவும் அறிவித்திருப்பது நல்ல விஷயம். ஆனால், இதற்கான செயல்பாடுகள் அதி விரைவில் ஆரம்பிக்கப்பட்டு, முடிக்கப்பட வேண்டும்,
மேலும், ரூ.31,000 கோடி மதிப்பீட்டில் முன்மொழியப்பட்ட மதுரை – தூத்துக்குடி தொழிற்சாலை வழித்தடம் (Industrial caridor) குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது நடைமுறைக்கு வந்தால், மதுரை மாவட்டம் தொழில் வளர்ச்சியில் இன்னும் சிறப்பான இடத்தை எட்டும் என்பதில் சந்தேகமே இல்லை!
விருதுநகர் மாவட்டத்தில் தொழில் வாய்ப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு குறித்து பஜார் வியாபாரிகள் சங்கச் செயலாளர் வெற்றியுடன் பேசினோம். அவர் கூறியதாவது…
‘‘விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மருத்துவப் பயன்பாட்டுக்குத் தேவைப்படும் பேண்டேஜ் துணிகள் தயாரிப்பு நிறுவனங்கள் வேலைவாய்ப்பை வழங்குவதில் முக்கியமான பங்காற்றுகின்றன. அதுபோல, பஞ்சாலைகளும், நூற்பாலைகளும் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சுற்றி தொழில்வாய்ப்புகளை வழங்கி வருகின்றன.
அருப்புக்கோட்டையில் பாரம் பர்யமாக கைத்தறி, விசைத்தறி ஆடை தயாரிப்பு, சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை மற்றும் விருதுநகர் தாலுகாக்களில் நூறு வருடங்களைக் கடந்து நடந்துவரும் பட்டாசுத் தொழில் நேரடியாகவும், மறைமுகமாகவும் எட்டு லட்சம் மக்களுக்கான வாழ்வாதாரமாக இருக்கிறது. இது தவிர, அச்சகம், காலண்டர் தயாரிப்பு பிரதான தொழில்களாக இருக்கின்றன.

விருதுநகர் மட்டுமே வத்தல், பருப்பு மற்றும் சிறுதானிய விளைபொருள் களுக்கு விலை நிர்ணயம் செய்யும் வர்த்தக நகரமாகத் திகழ்கிறது. எள், நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய் வித்துகளை மதிப்புக்கூட்டி சமையல் எண்ணெய் தயார் செய்யும் நிறுவனங்களும் சிறிது பெரிதாக விருதுநகரை மையப்படுத்தி செயல்படுவது இந்த மாவட்டத்தை தொழில்முனைவோர் மாவட்டமாக அடையாளப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், மத்திய அரசின் முன்னேற விழையும் மாவட்டங்களின் பட்டியலில் விருதுநகர் மாவட்டம் இடம்பெற்றிருப்பது தொழில் வளர்ச்சிக்கான காரணிகளை ஊக்கப்படுத்தத் தூண்டுகோலாக அமைந்திருக்கிறது.
விருதுநகர் மாவட்டத்தில் சிறு, குறு தொழில்களுக்கான வருமான வாய்ப்பு அதிகம். எனவே, சின்னச் சின்ன முதலீட்டின் பேரில் இளைஞர்- இளம்பெண்களுக்கு வேலைவாய்ப்பளிக்கக் கூடிய புதிய தொழில்களைத் தொடங்கலாம். உதாரணமாக, நவீன அரிசி ஆலை, பருப்பு மில், உணவு எண்ணெய் தயாரித்தல், உணவுப் பொருள் பதப்படுத்தும் நிலையம், இஞ்சி, வெள்ளைப்பூண்டு, புளி பேஸ்ட் தயாரித்தல், காயர் பித் மற்றும் காயர் ப்ளாக்ஸ், தென்னை நார் அலங்காரப் பொருள்கள், முருங்கை பவுடர், கறி மசால் பொடி, இலவம்பஞ்சு தலையணை – மெத்தைகள் தயாரிப்பு, ஆயத்த ஆடை, ரெக்சின் சீட் கவர் மற்றும் பேக் தயாரிப்பு, விவசாய கருவிகள் தயார் செய்தல் உட்பட பல்வேறு தொழில்கள் விருதுநகர் மாவட்டத்தில் நல்ல தொழில் வாய்ப்பை ஏற்படுத்தக் கூடியவை.
மேலும், ஏற்கெனவே இருக்கக் கூடிய தொழில்களுக்கு உதவிடும் வகையில் அதைச் சார்ந்த துணைத் தொழில்கள் செய்வதன் மூலம் நீண்டகால தொழில் வளர்ச்சியை உறுதிப்படுத்த முடியும்” என்றார்.
விவசாயம், விவசாயம் சார்ந்த தொழிலைக் கொண்டது தேனி மாவட்டம். ஏலக்காய், வாழை, திராட்சை அதிகம் விளைகிறது. கம்பம் பள்ளதாக்கு பகுதியில் ஆண்டுதோறும் திராட்சை விளைகிறது. இது குறித்தும் நம்மிடம் பேசிய தேனி மாவட்ட வியாபாரிகள் சங்கத் தலைவர் நடேசன், ‘‘திராட்சையில் இருந்து ஒயின் தயாரிக்கும் ஆலை உருவாக்க வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையை அரசாங்கம் விரைவில் நிறைவேற்றித் தரவேண்டும். ஆனால், அது நடக்கவில்லை. அதே போல, தேனியில் அதிக காய்கறி விளைகிறது. இங்கிருந்துதான் அண்டை மாநிலங்களுக்கு காய்கறிகள் அனுப்பப்படுகின்றன. விலை இல்லாத காலத்தில் காய்கறிகளைச் சேமித்து வைக்க குடோன் வசதி வேண்டும். மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களை உருவாக்கும் விவசாயத் தொழில்முனைவோர்களை ஊக்கப்படுத்த பல திட்டங்களைக் கொண்டு வர வேண்டும். அவர்களுக்கென சிறப்பு வரிச் சலுகை கொடுக்க வேண்டும்’’ என்றார்.


திண்டுக்கல் சுற்றுலா பகுதிகளை அதிகம் கொண்ட மாவட்டம் என்பதால், சுற்றுலாவை மையப்படுத்திய தொழில்களை உருவாக்க அரசு உதவ வேண்டும் என்பது திண்டுக்கல் மாவட்ட வர்த்தகர்களின் கோரிக்கையாக உள்ளது.
இது குறித்து நம்மிடம் பேசிய திண்டுக்கல் மாவட்டத் தொழில் வர்த்தக சங்கத்தின் செயலாளர் ஆனந்தா நஜீர்சேட், ‘‘திண்டுக்கல்பூட்டு, சிறுமலை வாழை, கொடைக்கானல் பூண்டு என ஒரு மாவட்டத்தில் மூன்று பொருள்களுக்குப் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதனை அடிப்படையாக வைத்து இந்தப் பொருள்களின் வர்த்தகத்தை அதிகபடுத்த அரசு உதவ வேண்டும்.
சேவரீஸ் உற்பத்தியில் புகழ்பெற்ற இரு நிறுவனங்கள் திண்டுக்கல்லில் இருந்து வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றன. இது மாதிரியான இன்னும் தொழில்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் உருவாக்கப்பட வேண்டும்” என்றார்.
விவசாயத்தைப் பிரதானமாகக் கொண்ட நெல்லை மாவட்டத்தில் தொழில் வாய்ப்புகள் எந்தளவுக்கு பிரகாசமாக இருக்கின்றன என்பது குறித்து, நெல்லை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்தின் செயலாளர் சஞ்சய் குணசிங்குடன் பேசினோம்.
“நெல்லை மாவட்டத்தில் நிறைய தொழில் வாய்ப்புகள் இருக்கின்றன. அதை கவனமுடன் தேர்வு செய்தால் வெற்றியாளராக முடியும். நெல்லை மாவட்டத்தில் நிறைய இளைஞர்கள் லாபகரமான தொழில் முனைவோராக உள்ளனர். பொறியியல் படித்துவிட்டு சுயதொழில் செய்ய வேண்டும் என்ப தற்காக தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு அதன் மூலம் மாதத்துக்கு ரூ.1 லட்சம் வரை சம்பாதிக்கின்றனர்.
திசையன்விளை, ராதாபுரம், களக்காடு, நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் முருங்கை சாகுபடி நடக்கிறது. முருங்கை இலைகளுக்கு பல்வேறு நாடுகளில் வரவேற்பு இருப்பதால், இலைகளை உலர வைத்து பொடி யாக்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடக்கும் வாழை விவசாயத்தின் மூலமாகவும் லாபம் ஈட்ட முடியும். குறிப்பாக, சிங்கப்பூர், மலேசியா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு வாழை இலைகளை ஏற்றுமதி செய்து சம்பாதிக்கலாம். வாழைப்பழம், வாழைப்பூ, தண்டு ஆகிய வற்றில் இருந்து மதிப்புக்கூட்டுப் பொருள்கள் தயாரித்து டின்களில் அடைத்து ஏற்றுமதி செய்யும் வாய்ப்புள்ளது. கங்கைகொண்டான் பகுதியில் சிப்காட் வளாகத்தில் இயங்கிவரும் பல்வேறு நிறுவனங்களுக்கும் மூலப் பொருள்கள் சப்ளை செய்வது, உதிரிபாகங்களை உருவாக்கிக் கொடுக்கும் தொழிற்சாலையைக் குறைந்த முதலீட்டில் அமைப்பது குறித்து சிந்திக்கலாம்.
இன்றைய இளைஞர்களுக்கு ஐ.டி தொழில் நுட்பத்தில் அதிக ஆர்வம் இருக்கிறது. ஆனால், உற்பத்தித் துறையிலும் விவசாயத் துறையிலும் நிறைய தொழில் வாய்ப்புகள் இருப்பதைப் பார்த்து, அவற்றையும் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

சமையல் பாத்திரங்களுக்கு உள்நாட்டில் மட்டுமல்லாமல் எல்லா நாடுகளிலுமே நல்ல தொழில் வாய்ப்பு இருக்கிறது. நெல்லை மாவட்டத்தில் அதற்கான தொழில் தொடங்கினால் நல்ல சந்தை வாய்ப்பு கிடைக்கும். பனைப் பொருள்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்வது, வாழை நாரில் இருந்து அழகான பைகள், வரவேற்பறையில் வைக்கக்கூடிய அழகுப் பொருள்கள் எனத் தயாரித்து இணையத்தில் ஆர்டர் எடுத்து வெளிநாடுகளுக்கு அனுப்பலாம்.
நாங்கள் குண்டூசி தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறோம். எங்கள் நிறுவனத்தின் குண்டூசிகள் நமது நாட்டில் மட்டும் அல்லாமல் வெளிநாடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. அதனால் வித்தியாசமான முறையில் சிந்தித்து நேர்மை யாகச் செயல்பட்டால் எந்தத் தொழிலிலும் முன்னேற்றம் காண முடியும். இன்றைய இளைஞர்கள் இதை உணர்ந்து செயல்பட்டால், நெல்லை மாவட்டத்தை மிகச் சிறந்த தொழில் நகரமாக உருவாக்க முடியும் என்பதில் சந்தேகம் இல்லை” என்றார் அக்கறையுடன்.
தென்காசி மாவட்ட தொழில் வாய்ப்புகள் குறித்து நம்மிடம் பேசினார் தொழில் துறை ஆலோசகரான ஆனந்தன் அய்யாசாமி.
“தென்காசி மாவட்டம் இயற்கைவளம் மிகுந்த மாவட்டம். சங்கரன்கோவில் சுற்று வட்டாரப் பகுதிகளில் சாமந்தி, சூரியகாந்தி, சம்பங்கி, கனகாம்பரம் உள்ளிட்ட மலர்கள் பயிரிடப்படுவதால் சென்ட் தொழிற்சாலை அமைத்தால் நல்ல வரவேற்பு கிடைக்கும்.
வாசுதேவநல்லூர், சிவகிரி, செங்கோட்டை, புளியரை, புளியங்குடி பகுதிகளில் எலுமிச்சை அதிகமாக சாகுபடியாகிறது. தமிழகத்தில் எலுமிச்சைச் சந்தையும் புளியங்குடியில் அமைந்திருப்பதால், அதிலிருந்து மதிப்புக்கூட்டுப் பொருள்கள் தயாரித்து சந்தை வாய்ப்பைப் பெறலாம்.
மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தென்காசி மாவட்டத்தில் பழவகைகள் அதிகமாக விளைகின்றன. அவற்றைப் பயன்படுத்தி பழரசத் தயாரிப்பு தொழிற்சாலை களை அமைக்கலாம்.
நிறைய மர அறுவை ஆலைகள் பிரானூர் பார்டர் பகுதியில் செயல்பட்டு வருவதால், உயர்ரக மரப் பலகைகள் சுலபமாகக் கிடைக்கும். அவற்றைப் பயன்படுத்தி பர்னிச்சர் உற்பத்தி செய்யும் தொழில் செய்யலாம்.

தென்காசி மாவட்டத்தில் மத்தளம்பாறை பகுதியில் ஜோஹோ நிறுவனம் நடத்தும் ஐ.டி ஆபீஸ் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதுடன், அந்தப் பகுதியில் இருக்கும் பல நூறு பேருக்கு வேலைவாய்ப்பினையும் ஏற்படுத்தித் தந்துள்ளது. இந்த மாவட்டத்தில் ஜோஹோ நிறுவனம் அலுவலகம் அமைத்து செயல்படுவதைப் போல பிற ஐ.டி நிறுவனங்களும் தாராளமாக இங்கு வந்து தொழில் தொடங்கலாம். இதனால் இந்த மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து, மாவட்டத்தின் பொருளாதாரம் நன்கு உயர வாய்ப்பு உருவாகும்’’ என்றார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன், தேன், ரப்பர், தென்னை மரப்பொருள்களைப் பயன்படுத்தி தொழில் முனைவோராக மாறலாம் என்றார் தொழில் ஆலோசகர் ஞானசேகர். அவர் கூறியதாவது…
“கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆழ்கடல் மீன்பிடித் தொழில் சிறப்பாக உள்ளது. குமரியில் உள்ள நான்கு மீன்பிடி துறைமுகங்கள் மூலம் கேரளா வரை சென்று மீன் பிடித்து வருகின்றனர். அந்த மீன்களை உடனடியாக வெளி மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கும் நிலையை மாற்றி, அவற்றைப் பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிலுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். மருந்துப் பொருள்களில் சேர்க்கப்படும் மீன் எண்ணெய் சேகரிப்பு தொழில்களைத் தொடங்கலாம்.

மாவட்டம் முழுவதும் உள்ள தென்னை மரங்களில் கிடைக்கும் தேங்காயில் இருந்து தற்போது எண்ணெய் மட்டுமே எடுக்கப்படுகிறது. தேங்காய் சிரட்டையில் இருந்து கலைப்பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் செய்வதற் கும்; தேங்காய் பவுடர், தேங்காய் துருவல் பாக்கெட்டில் விற்பனை செய்வதற்கும்; தேங்காய் தண்ணீரை மதிப்புக் கூட்டி குளிர்பானம் செய்வதற்குமான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
இங்கிருந்து இளநீரை கேரளாவுக்கு வாங்கிக்கொண்டுபோய் பதப்படுத்தி குளிர்பானங்கள் போன்று டப்பாவில் அடைத்து விற்பனை செய்கிறார்கள். இது, 15 முதல் 20 நாள்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும். இந்தத் தொழிலையும் குமரியில் தொடங்கலாம்.
முருங்கைக்காயைப் போன்று இளநீருக்கும் உலகம் முழுவதும் விற்பனை வாய்ப்பு உள்ளது. தேங்காய் மட்டையில் இருந்து நார் பிரித்தெடுக்கும்போது கழிவாக வரும் தூளை கோகோபீட் என்ற பெயரில் வெளிநாட்டுக்கு அனுப்புகிறார்கள். தேங்காய் நாரில் மிதியடி, பிரஸ் போன்றவை செய்யும் வாய்ப்பும் அதிகமாக உள்ளது. குமரியில் சுமார் 26000 ஹெக்டேரில் தென்னை விவசாயம் நடப்பதால் மூலப்பொருளுக்கு தட்டுப்பாடு இருக்காது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் தேன், தேசிய அளவில் பிரசித்தி பெற்றது. குமரியைச் சேர்ந்தவர்கள் கேரளாவில் பெட்டிகளை வைத்து உற்பத்தி செய்யும் தேனையும் இங்கு கொண்டுவருகிறார்கள். தேனுடன் நெல்லிக்காய், பேரீட்சை, முந்திரிப் பருப்பு சேர்த்து மதிப்புக்கூட்டி விற்பனைச் செய்தால் சர்வதேச சந்தை வாய்ப்பு கிடைக்கும்.
குமரி மலையோரப் பகுதிகளில் ரப்பர் பால் வடிக்கும் தொழில் நடக்கிறது. ரப்பரைப் பயன்படுத்தி செருப்பு, பல்வேறு இயந்திரங்களுக்குத் தேவையான வாசர் என மதிப்புக் கூட்டுப் பொருள்கள் உற்பத்தி செய்து லாபம் ஈட்டலாம். அதனால் சரியான திட்டமிடலுடன் தொழில் தொடங்கினால் சிறப்பான எதிர்காலம் அமையும்” என்றார்.
அகில இந்திய தொழில் வர்த்தக சங்கத்தின் செயலாளர் சுரேஷ் குமாரிடம் பேசினோம்.
“தென் மாவட்டங்களில் தொழில் வாய்ப்புக்கு மிகச் சிறந்த ஊர், தூத்துக்குடி. தரைவழி, கடல் வழி, வான்வழி என மூன்று போக்குவரத்து வாய்ப்பு இருப்பது முக்கியமான காரணம் ஆகும். மீன் பிடித்தல் மற்றும் ஏற்றுமதி, ஷிப்பிங், உப்பு ஆகியவை தான் முக்கியமான தொழிலாக உள்ளது.

இந்தியாவின் தீப்பெட்டி தேவையில் 90 சதவிகிதத்தைப் பூர்த்தி செய்வது கோவில்பட்டி. நேரடியாகவும் மறைமுகமாகவும் 5 லட்சம் தொழிலாளர்கள் இதில் ஈடுபடுகிறார்கள். இதில் பெரும்பாலானவர்கள் பெண் தொழிலாளர்கள்தான். இந்தியா மற்றும் வெளி மாநிலங்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் இங்கு உள்ள தீப்பெட்டி ஏற்றுமதி செய்யப்படுகிறது.
வியட்நாமைச் சேர்ந்த ‘வின் ஃபாஸ்ட்’ என்ற தனியார் மின்சார கார் தொழிற்சாலை சில்லாநத்தம் சிப்காட் வளாகத்தில் ரூ.16,000 கோடி முதலீட்டில் 408 ஏக்கர் பரப்பளவில் நிறுவனத்தைத் தொடங்க அடிக்கல் நாட்டப்பட்டு சுற்றுச்சூழல் அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் அமைந்தால் உதிரிபாகங்கள் தயாரிக்கும் சுமார் 100 துணை நிறுவனங்களுக்கான வாய்ப்பு கிடைக்கும். அதற்கு இப்போதே தயாராவது நல்லது.

நாட்டின் முதலாவது சர்வதேச பர்னிச்சர் பூங்கா, தூத்துக்குடி சிப்காட் பகுதியில் ரூ1,000 கோடி முதலீட்டில் 1,150 ஏக்கர் பரப்பளவில் அமைய தமிழக முதல்வர் கடந்த ஜனவரி 11-ல் அடிக்கல் நாட்டியுள்ளார். இந்த பூங்கா மூலம் ரூ.4,500 கோடிக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க முடியும். 3.5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். பர்னிச்சர் தொழிலுக்கு என முதல் பொருளாதார மண்டலமாக இது அமைவதால், மர அரவை ஆலை, பர்னிச்சர் பொருள்கள் தயாரிப்பு ஆகியவற்றுக்கு நல்ல சூழல் இருக்கும். பர்னிச்சர் ஏற்றுமதிக்கு உகந்த நிலை உருவாகும்.
காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால், கயத்தார், கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றாலைகளும் அதிகரித்துள்ளன. அவற்றுக்குத் தேவையான உதிரிபாகங்கள் உருவாக்கும் தொழிற்சாலைகள் அமைக்கலாம்.

தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கப் பணிகள் விரைவில் முடிவடைய இருப்பதால் தூத்துக்குடி பெரும் தொழில் நகரமாக மாற வாய்ப்புள்ளது. அதை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சுருக்கமாக, தூத்துக்குடி மாவட்டம் விவசாயத் தொழிலில் இருந்து உற்பத்தித் தொழிலுக்கு வேகமாக மாறி வருகிறது. இந்த வளர்ச்சி இனிவரும் காலத்தில் இன்னும் அதிகமாக இருக்கும்’’ என்றார்.
இந்த மாவட்டங்களில் தொழில்துறை நன்கு வளர வேண்டும் என இந்த மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் ஆர்வத்துடன் இருப்பதை இந்த மாவட்ட மக்களுடன் பேசும்போதே நன்கு தெரிகிறது.
ராமநாதபுரம் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அமைப்பின் தலைவர் பி.ஜெகதீசன் அவர்கள் கூறுகையில்… ‘‘தமிழகத்திலேயே நீண்ட கடற்கரையைக் கொண்டுள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் தொழில் தொடங்க தேவையான நிலம், மின்சாரம், தண்ணீர் போன்றவை அபரிமிதமாக இருப்பதா, நன்கு தொழில் வளர்ச்சி அடைய நிறையவே வாய்ப்பு உள்ளது.
பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கடற்கரையோர பகுதிகளில் ஏராளமான உப்பளங்கள் உள்ளன. இவற்றை ஒன்றினைத்து ஒருங்கிணைந்த தொழிற்சாலைகள் ஏற்படுத்தலாம். உப்பூர் பகுதியில் அமைக்கப்பட்டு வந்த அனல் மின் நிலையத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதன் மூலம் பல சார்பு தொழில்கள் உருவாக வாய்ப்புள்ளது.

வங்காள விரிகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடலில் கிடைக்கும் கடல் உணவுப் பொருள்களை மேம்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிலில் சில தனியார் கம்பெனிகள் இயங்குகின்றன. இந்தத் தொழிலை மேம்படுத்த அரசு இது போன்ற நிறுவனத்தை ஏற்படுத்துவதன் மூலம் தொழில்வளம் பெருகுவதுடன், மீனவர்கள் தாங்கள் பிடித்து வரும் மீன்களுக்கு உரிய விலையும் கிடைக்கும். மேலும், மாவட்டத்தில் கிடைக்கும் மீன்களைப் பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்ல ஏதுவாக குளிர்சாதன வசதியுடன்கூடிய சரக்கு ரயில் பெட்டிகள் வசதியை ஏற்படுத்தித் தந்தால், இந்தத் தொழில்கள் இன்னும் சிறப்பாக நடக்கும்.
இதேபோல, கடல்வழி வணிகத்தை உருவாக்கும் வகையில் இயற்கை துறை முகங்களான தொண்டி, வாலிநோக்கம் மற்றும் தனுஷ்கோடி பகுதிகளில் துறைமுகங்கள் அமைக்க அரசு முன்வர வேண்டும்’’ என்றார்.
அடுத்து, மாநில நுகர்வோர் கூட்டமைப்பின் முன்னாள் பொருளாளர் ந.ஜெயகாந்தனுடன் பேசினோம். அவர் கூறியதாவது…
‘‘ராமநாதபுரம் மாவட்டக் கடலில் இருந்து கிடைக்கக்கூடிய சங்கு, சிப்பி உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு அழகு சாதன பொருள்கள் உருவாக்கும் தொழிலை அரசு ஏற்படுத்த வேண்டும். சில தனியார் நிறுவனங்கள் இதைக் குடிசைத் தொழில் போல ஏற்கெனவே செய்து வந்தாலும், இன்னும் பல நிறுவனங்கள் உருவாகத் தேவையான திட்டங்களை அரசாங்கம் அறிவிக்க வேண்டும். தவிர, இந்த நிறுவனங்கள் தயாரிக்கும் பொருள்களை சந்தைப்படுத்தும் வாய்ப்புகளையும் ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் பெண்களுக்குக் கிடைக்கும் வருமானம் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு அதிகரிக்கும். இதனால், ராமநாதபுர மாவட்டத்தின் பொருளாதாரமே உயரும்.

ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதிகளில் பல வகையான வண்ண மீன்கள் கிடைக்கின்றன. இது குறித்து இளைஞர்களுக்குப் பயிற்சி அளிப்பதன் மூலம் அவர்கள் பகுதி நேர தொழிலாக வண்ண மீன் வளர்ப்பில் ஈடுபட்டு வருவாய் ஈட்ட நிறைய வாய்ப்புள்ளது.
வழுதூரில் இயற்கை எரிவாயு மின் நிலையம் இயங்கி வருகிறது. அங்கு கிடைக்கும் எரி வாயுவைக்கொண்டு உபதொழில்கள் ஏராளமாக உருவாக வாய்ப்புண்டு.
ராமநாதபுரம் மாவட்டத்தின் வரமாகத் திகழ்வது பனை மரங்கள். அதில் இருந்து கிடைக்கக்கூடிய பதநீர், கருப்பட்டி போன்றவை பருவகாலங்களில் மட்டும் கிடைக்கும் பொருளாக உள்ளது. கோடை காலத்தில் அதிக அளவில் கிடைக்கும் பதநீரை முறையாகச் சேகரித்து, பதப்படுத்தி வெளியிடங்களுக்கு அனுப்பும் தொழிலை உருவாக்கினால், ராமநாதபுரத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகச் சிறப்பாக அமையும். அதே போல, ஆயுர்வேதம், சித்த வைத்தியம் ஆகியவற்றில் பயன்படக்கூடிய கருப்பட்டியை அதிக அளவில் தயாரிக்கும் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இதன் மூலம் பனை மரங்களை அழிவிலிருந்தும் காப்பாற்ற முடியும்.
மாவட்டத்தில் அதிக அளவில் கிடைக்கும் தென்னை நார்க் கழிவுகளைக் கொண்டு மாடித் தோட்டங்கள் அமைப்பதற்கான செடித் தொட்டிகளை உருவாக்குதல் மற்றும் தென்னை நார் பொருள்கள் தயாரிப்பதற்கான பயிற்சி அளிக்கக்கூடிய நிறுவனங்களையும் ஏற்படுத்தலாம்’’ என்றார்.
சிவகங்கை வர்த்தகர் சங்கத்தின் தலைவர் அறிவுத்திலகத்துடன் பேசினோம். அவர் கூறியதாவது…
‘`சிவகங்கை மாவட்டத்தைப் பொறுத்தவரை, பெரிய அளவில் தொழில் வளர்ச்சி அடைவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இந்த மாவட்டத்தில் கோமாளிப்பட்டியில் 30 ஆண்டுகளுக்குமுன் தொடங்கப்பட்ட அரசு நிறுவனமான கிராபைட் தொழிற்சாலையை அதிவிரைவில் விரிவாக்கம் செய்ய வேண்டும். இதன் மூலம் சிவகங்கையைச் சேர்ந்த இன்னும் பல நூறு பேருக்கு வேலை கிடைக்கும்.
காரைக்குடி, தேவகோட்டையில் கல்வி நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளதால், புதிய தொழில்கள் தொடங்கப்பட்டாலும் வேலை செய்வதற்கு நிறைய ஆட்கள் எளிதில் கிடைப்பார்கள்.
காரைக்குடியில் தயாராகும் சுங்குடி சேலைகளுக்கும், ஆத்தங்குடி பகுதியில் தயாரிக்கப்படும் பாரம்பர்ய டைல்ஸ் கற்களுக்கும் தனி மவுசு இருக்கிறது. இவற்றை ஆதாரமாகக் கொண்டு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தினால் இந்த மாவட்டம் தொழில் வளர்ச்சியைப் பெறும்.
இதேபோல, 2013-ம் ஆண்டு முத்துப்பட்டியில் அரசால் தொடங்கப்பட்ட ஸ்பைசஸ் பார்க் உடனடியாக செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். இதன் மூலமும் பல நூறு பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

சிங்கம்புணரி பகுதியில் அதிக அளவில் உள்ள தென்னையில் இருந்து கிடைக்கக்கூடிய நார்களைக் கொண்டு மெத்தை, மிதியடி உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் உருவாக்கப்படும் தொழில்கூடத்தை அந்தப் பகுதி விவசாயிகள் இணைந்து உருவாக்கியுள்ளனர். இதை மேம்படுத்துவதன் மூலம் மேலும் பலருக்கு வருவாய் கிடைக்க வழி உண்டாகும்.
இவை தவிர, செட்டிநாடு பகுதியில் உள்ள பாரம்பர்ய வீடுகள், குன்றக்குடி முருகன் கோயில் உள்ளிட்ட ஆன்மீகத் தலங்களை உள்ளடக்கிய சுற்றுலாத் தொழிலையும் உருவாக்கலாம். இதன் மூலமும் சிவகங்கை மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சி இன்னும் அதிகமாக்கலாம்’’ என்றார்.
தொகுப்பு: ம.முத்துநிலவன், சி.சம்யுக்தா, யு.லாவண்யா
