இந்தி, மலையாளம், தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, பஞ்சாபி மொழியிலும் சில படங்களில் நடித்தவர் நடிகை காதம்பரி ஜெத்வானி. இவர் தமிழில் நடித்த “செந்தட்டி காளை செவத்த காளை’ என்ற படம் இன்னும் வெளியாகவில்லை. ஆந்திரா மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட இவர், மும்பையில் வசித்து வருகிறார். இவர் சமீபத்தில், “என்னிடம் தவறாக நடந்துகொள்ள முயன்ற பிரபல தொழிலதிபர் ஒருவர், முந்திக்கொண்டு எங்களுக்கு எதிராக ஆந்திர ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் குக்கல வித்யாசாகர் மூலம் எங்களுக்கு எதிராக ஆந்திராவில் வழக்குப்பதிவு செய்யக் கேட்டுக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து, விஜயவாடா காவல்துறை, கடந்த பிப்ரவரி மாதம் மும்பைக்கு வந்து, என்னையும் என் குடும்பத்தினரையும் அழைத்துச் சென்று, 3 நாள்கள் சித்ரவதை செய்தனர். ஐ.பி.எஸ் அதிகாரியே என்னை உடல் ரீதியிலும், மன ரீதியிலும் துன்புறுத்தினார். 48 நாள்களுக்கு பிறகு நாங்கள் சிறையிலிருந்து வெளியே வந்தோம். கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. தற்போது முதலமைச்சராக உள்ள சந்திரபாபு நாயுடு எங்களுக்கு உதவி செய்து எங்களை காப்பாற்ற வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
