கோவையில் நேற்று முன்தினம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், தொழில்துறை பிரமுகர்களுக்கும் இடையே நடைபெற்ற கலந்துரையாடலின்போது, அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் ஜி.எஸ்.டி குறித்து கோரிக்கை வைக்கும் வீடியோ வைரலானது. அதன் பின்னர், அன்னபூர்ணா சீனிவாசன் பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் முன்னிலையில் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்பது போன்ற வீடியோ வைரலாகவே, `கோரிக்கை வைத்ததற்காக மன்னிப்பு கேட்க வைப்பதா” என இந்த விவகாரம் பெரும் விவாதப்பொருளானது.

மேலும், ராகுல் காந்தி, கனிமொழி, ஜோதிமணி, சீமான் ஆகியோர் இந்த விஷயத்தில் பா.ஜ.க-வுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையில், அன்னபூர்ணா சீனிவாசன் தான் தாமாக முன்வந்து மன்னிப்பு கேட்டதாக வானதி சீனிவாசன் விளக்கமளிக்க, மறுபக்கம் லண்டனிலிருந்து அண்ணாமலை, தனிப்பட்ட உரையாடல் வீடியோவை பா.ஜ.க செயல்பாட்டாளர்கள் பகிர்ந்ததற்காக மன்னிப்பு கேட்பதாக ட்வீட் செய்தார். இந்த நிலையில், இதை மேலும் தொடர வேண்டாம் என பா.ஜ.க தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கும் வானதி சீனிவாசன், `வழக்கம் போல தங்கள் மடைமாற்றும் அரசியலைத் துவக்கியுள்ள தி.மு.க-வினருக்கு கண்டனம்’ எனத் தெரிவித்திருக்கிறார்.
