அதைத் தொடர்ந்து, நீதிபதி, “மனுதாரரின் கோரிக்கையை ஏற்று, ஊடகங்கள், குற்றப்பத்திரிக்கையில் இருக்கும் தகவல்களை ஒளிபரப்பினாலோ, அச்சிட்டாலோ, வெளியிட்டாலோ, அவர்கள் மீது, கேபிள் டெலிவிஷன் நெட்வொர்க் விதிகள், 1994-ஐ மீறும் அடிப்படையில், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தார்.
இதற்கு அமைச்சகம் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அரவிந்த் காமத், “விதிமீறல்கள் குறித்து புகார் அளிக்கப்பட்டால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த உத்தரவு தொடர்பாக கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, “ குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களுக்கு, குற்றப்பத்திரிகை வழங்கப்படுகிறது. அதனால் அது ரகசிய ஆவணமல்ல. அதில் இருக்கும் தகவல்கள் பொது களத்தில் வெளிவரும். அதை யாராலும் தடுக்க முடியாது. அதே நேரம் பொது விவாதத்தின் அடிப்படையில் நீதிமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்படக் கூடாது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
