தங்கள் வீடுகள், வணிகங்கள் மற்றும் கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நாடு தழுவிய நாசவேலைகளுக்கு மத்தியில் இந்தத் தாக்குதலை கண்டித்து வங்கதேச தலைநகா் டாக்கா மற்றும் சட்டாகிராம் பகுதியில் ஹிந்துக்கள் பாதுகாப்புக் கோரி சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து 2-ஆவது நாளாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் சிறுபான்மையினரை துன்புறுத்துவோர் மீதான விசாரணைகளை துரிதப்படுத்த சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும், நாடாளுமன்ற இடங்களில் 10 சதவீத இடங்களை சிறுபான்மையினருக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும், சிறுபான்மையினர் பாதுகாப்புச் சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை ஹிந்து போராட்டாக்காரா்கள் வலியுறுத்தினா். ஆயிரக்கணக்கான ஹிந்துக்கள் பங்கேற்று நடத்திய இந்த போராட்டத்தில் அவா்களுக்கு ஆதரவாக முஸ்லிம்கள் மற்றும் மாணவா்களும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதற்கிடையில்,வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிரான தாக்குதலை நிறுத்துவதற்கும், இது குறித்த விசாரணைக்கு அமெரிக்கா நேரடியாக தலையிட வேண்டும் என்று ஸ்ரீ தானேதாா், ராஜா கிருஷ்ணமூா்த்தி ஆகிய இந்திய அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுதொடா்பாக அவா்கள் இருவரும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆண்டனி பிளிங்கனுக்கு அண்மையில் எழுதிய கடிதத்தில், ‘வங்கதேசத்தில் உள்ள ஹிந்துக்களுக்கு மற்றும் பிற சிறுபான்மை சமூகத்தினரை பாதுகாப்பதில் உள்ள தோல்விகள் மற்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுப்பது குறித்தும் மேலும் ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்கு கொண்டு வர, முகமது யூனுஸின் நிர்வாகத்திடம் வலியுறுத்துமாறு அமெரிக்கா பேச்சுவாா்த்தை மேற்கொள்ள வேண்டும்’ என்று பிளிங்கனிடம் வேண்டுகோள் விடுத்தனா்.
