தில்லி ஐஏஎஸ் பயிற்சி மையத்துக்குள் வெள்ள நீர் புகுந்ததில் 3 மாணவர்கள் பலியான விவகாரத்தில், மேலும் 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை பயிற்சி மைய கட்டட உரிமையாளர் அபிஷேக் குப்தா மற்றும் பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் தேஷ்பால் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்கள் இருவருக்கும் 14 நாள்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தில்லி காவல்துறை துணை ஆணையர் ஹர்ஷவர்தன் கூறியதாவது:
“இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்படுவர். வாகனத்தை தவறுதலாக இயக்கி பயிற்சி மைய கட்டடத்தின் கதவை சேதப்படுத்திய ஓட்டுநர் உள்பட மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்பகுதியில் சட்டம் – ஒழுங்கை கட்டுக்குள் வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.” எனத் தெரிவித்தார்.
