தேசிய முன்னேற்றக் கழகம் நிறுவன தலைவர் டாக்டர் ஜி.ஜி.சிவா வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை :
நாடு விடுதலை அடைந்த போது தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு காரணமாக இருந்ததாக ஆர்.எஸ்.எஸ். இயக்கம் 1948-ல் தடை செய்யப்பட்டது. பின்னர் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மீதான தடை நீக்கப்பட்டது. 1966-ல் பசுவதைக்கு எதிராக நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
இதன் ஒரு பகுதியாக டெல்லியில் பெரும் வன்முறை வெடித்தது. டெல்லியில் நாடாளுமன்றைத் தாக்கவும் ஒரு கும்பல் முயற்சித்தது. மற்றொரு கும்பல் டெல்லியில் பெருந்தலைவர் காமராஜர் தங்கி இருந்த இல்லத்துக்கு தீ வைத்து அவரை உயிரோடு எரித்து படுகொலை செய்யவும் முயற்சித்தது. இந்த கொலை முயற்சியில் இருந்து பெருந்தலைவர் காமராஜர் உயிர் தப்பினார். இதனையடுத்து ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சேரவும் அதன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தடை விதித்தார்.
இந்த தடை அமலில் தொடர்ந்து இருந்து வந்தது. மத்தியில் பாஜக ஆட்சிகள் அமைந்த போதும் கூட இந்த தடை நீக்கப்படவில்லை. அரசு ஊழியர்களாக இருப்பவர்கள் எந்த அரசியல் கட்சியிலும் உறுப்பினர்களாக இருக்கக்கூடாது என்பது அரசு விதி. அதன்படி தற்போது வரை மத்திய மாநில அரசு மற்றும் பொது நிறுவனங்களில் இந்த விதி பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் சேரும் வகையில் அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.
ஒன்றிய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை, பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் தெரிகிறது இதற்கு கடும்கண்டனங்களை பதிவு செய்கிறோம். ஆர்.எஸ்.எஸ். மீதான தடை நீக்கம் காரணமாக கல்வி நிலையங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் போன்றவை காவிமயமாக்கப்படும் சூழ்நிலையில், அரசுத் துறைகளையும் காவிமயப்படுத்தும் இம்முயற்சி கடும் கண்டனத்திற்குரியது. மத்திய அரசு இந்த அறிவிப்பினை திரும்பப் பெற வேண்டுமென தேசிய முன்னேற்ற கழகம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

