நீட் தேர்வு முடிவுகளை தேர்வு மையங்கள் வாரியாக சனிக்கிழமை நண்பகலுக்குள் வெளியிட தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட் முறைகேடுகள் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வினாத்தாள்கள் 6 நாட்கள் வரை கொரியர் நிறுவனத்திடம் இருந்ததாகவும், ஜார்க்கண்ட்டில் ஆட்டோ மூலம் பள்ளிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் மனுதாரர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
அப்போது, நீட் தேர்வுக்கான விண்ணப்ப கட்டணமாக 400 கோடி ரூபாய் வசூலித்துவிட்டு ஆட்டோ ரிக்ஷாவில் தான் வினாத்தாள்களை அனுப்புவீர்களா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஹசாரிபாக் தேர்வு மையத்தில் வினாத்தாள் கசிந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறிய நீதிபதிகள், மாணவர்களின் பெயர்களையும், எண்களையும் மறைத்து மையங்கள் வாரியான நீட் தேர்வு முடிவுகளை பொதுவெளியில் வெளியிட தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டனர்.
மேலும் மையங்கள் வாரியான முடிவுகளை சனிக்கிழமை நண்பகலுக்குள் தேசிய தேர்வு முகமையின் இணையத்தில் பதிவேற்றம் செய்யவும், உச்சநீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யவும் உத்திரவிட்ட நீதிபதிகள், நீட் முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணையை வரும் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
.

