India oi-Mathivanan Maran
Published: Saturday, June 17, 2023, 13:13 [IST]
பெங்களூர்: கர்நாடகாவில் பிரதமர் நரேந்திர மோடி மே மாதம் பிரசாரம் செய்த பொதுக்கூட்ட செலவு விவகாரத்தால் பாஜக எம்.எல்.ஏக்கள் விழிபிதுங்கி போயுள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் ஆணைய விதிமுறைகளை மீறி செலவு செய்திருந்தது உறுதியாகும் போது பதவி பறிபோகும் அச்சத்தில் 2 பாஜக எம்.எல்.ஏக்கள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்நாடகா சட்டசபை தேர்தலில் பிரதமர் மோடி அதிதீவிரமாக பிரசாரம் செய்தார். ஒரு மாநில சட்டசபை தேர்தலில் நாட்டின் பிரதமர் மோடி, இவ்வளவு தீவிரமாக பிரசாரம் செய்தது அப்போதே விவாதப் பொருளானது. சமூக வலைதளங்களில் கர்நாடகா மக்களே இதனை அதிருப்தியுடன் சுட்டிக்காட்டி இருந்தனர். குறிப்பாக பிரதமர் மோடி கடந்த மே மாதம் 3-ந் தேதி அன்கோலாவில் பங்கேற்ற பிரசார கூட்டம் இப்போது பெரும் சர்ச்சையாகவும் வில்லங்கமாகவும் உருவெடுத்துள்ளது. பிரதமர் மோடியுடன் கடந்த மே 3-ந் தேதி பொதுக்கூட்டத்தில் சிட்டிங் எம்.எல்.ஏக்களான முன்னாள் அமைச்சர் ஹெப்பர் மற்றும் ஷெட்டி பங்கேற்றனர். இந்த ஒரு பொதுக் கூட்டத்துக்கு ரூ1.10 கோடி செலவாகி இருக்கலாம் என மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கணக்கிட்டுள்ளனர். பிரதமர் மோடியுடன் மேடையில் இருந்த வேட்பாளர்கள் தாங்கள் தலா ரூ18.33 லட்சம் செலவு செய்தோம் என்கின்றனர். ஆனால் பிரதமர் மோடி பிரசார கூட்டத்துக்கு 800 பேருந்துகளில் பொதுமக்கள் அழைத்துவரப்பட்டனர்; கோவா மாநிலத்தில் இருந்தும் 150 பேருந்துகளில் இறக்குமதி செய்யப்பட்டனர். இந்த பேருந்துகளுக்கான செலவு தொகை மட்டுமே தேர்தல் ஆணையம் வரையறை செய்த வரம்புகளைவிட அதிகமாக வருகிறதாம். இதனையும் பிரதமர் மோடியுடன் மேடையில் இருந்த தற்போதைய 2 எம்.எல்.ஏக்கள் உட்பட 6 பேரிடமும் சுட்டிக்காட்டி கணக்கு கேட்டிருக்கின்றனர் தேர்தல் அதிகாரிகள். இப்போது இந்த 6 பேரும் ஆளுக்கு ஒரு திசையில் கைகாட்டுகின்றனர். இன்னொரு பக்கம் தேர்தல் விதிமுறைகளை மீறியதாகவும் உள்ளூர் தேர்தல் அதிகாரிகள் போலீசிலும் புகார் கொடுத்துள்ளனராம். இதனால் பிரதமர் மோடி பொதுக் கூட்டத்துக்கான உண்மையான செலவு விவரத்தை முழுமையாக பெறாமல் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஓயமாட்டார்கள் என கூறப்படுகிறது. அப்படியான நிலையில் சிட்டிங் பாஜக எம்.எல்.ஏக்கள் பதவி பறிக்கப்பட்டு தகுதி நீக்கமே செய்யப்படலாம் எனவும் மூத்த பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற
Allow Notifications
You have already subscribed English summary
Karanataka Media Reports said that the Two BJP MLAs face disqualification for the poll expenses.
Story first published: Saturday, June 17, 2023, 13:13 [IST]

