அகர்தலா: திரிபுராவில் ஏற்பட்ட திடீர் வன்முறை காரணமாக இன்டெர்நெட் துண்டிக்கப்பட்டிருக்கிறது. மேலும் பதற்றம் பரவாமல் இருக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
திரிபுராவின் தலாய் மாவட்டத்தில் உள்ள கந்தசெரா கிராமத்தில் சமீபத்தில் கண்காட்சி ஒன்று நடந்திருக்கிறது. இதில் உள்ளூர் குழுக்கள் இரண்டுக்கு இடையில் சண்டை ஏற்பட்டிருக்கிறது. இந்த சண்டையில் பரமேஸ்வர் ரியாங் எனும் இளைஞன் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அனைத்தும் கடந்த 7ம் தேதி நடந்திருக்கிறது. உயிரிழந்த இளைஞரின் உடலை கைப்பற்றிய போலீசார் அதனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து இளைஞரின் உறவினர்கள், கொலைக்கு நீதி கேட்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் வன்முறையாக வெடித்திருக்கிறது. இந்த வன்முறையில் ஏராளமான கடைகளுக்கு தீ வைக்கப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் பலர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர். இதனையடுத்து உடனடியாக போலீசார் குவிக்கப்பட்டு கலவரத்தில் ஈடுபட்டதாக 4 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
இது குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், “போரட்டம் என்கிற பெயரில் இவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். ஏராளமான கடைகளுக்கு தீ வைத்திருக்கின்றனர். பொதுமக்களையும் மிரட்டியுள்ளனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர கலவரத்தில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்துள்ளோம். கலவரம் மேலும் பரவாமல் இருக்க எல்லா இடத்திலேயும் காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப்படையினரை பாதுகாப்புக்கு ஈடுபடுத்தியிருக்கிறோம். தற்போது நிலைமை கட்டுக்குள் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
இது குறித்து தலாய் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், “கலவரத்தை மேலும் பரவ செய்ய சோஷியல் மீடியாக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சோஷியல் மீடியா மூலம் பரவிய சில தவல்கள் மக்களை தூண்டி விட்டிருக்கிறது. இப்படியே சென்றால் சட்டம் ஒழுங்கு மோசமடையும் என்பதை உணர்ந்த நாங்கள், உடனடியாக இன்டெர்நெட் இணைப்பை துண்டித்திருக்கிறோம். மேலும் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த 24 மணி நேரத்திற்கு இன்டெர்நெட் துண்டிக்கப்பட்டிருக்கும்” என்று கூறியுள்ளார்.
திரிபுரா வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றாகும். சமீப காலமாக வடகிழக்கு மாநிலங்களில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. குறிப்பாக மணிப்பூர் கலவரம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. தற்போது வரை பிரதமர் அங்கு செல்லவில்லை என்று காங்கிரஸ் விமர்சித்து வருகிறது. ரஷ்ய செல்ல பிரதமருக்கு நேரம் இருக்கிறது, ஆனால் மணிப்பூர் போக நேரமில்லையா என காங்கிரஸ் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இப்படி இருக்கையில், திரிபுராவில் வன்முறை சம்வம் காரணமாக இன்டெர்நெட் துண்டிக்கப்பட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது விவாதங்களை கிளப்பியுள்ளது.

திரிபுரா மாநிலத்தில் உள்ள வன்முறைக்கு உண்மையான காரணத்தை அறிந்து அந்தக் குறையை நிவர்த்தி செய்வதோடு நாட்டில் அமைதி நிலவ செய்ய வேண்டும்