திருப்புமுனையாக அமைந்த தருணங்கள்:
ஒரு கட்டத்தில் 18 பந்துகளில்(3 ஓவர்களில்) 22 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலைமைக்கு ஆட்டம் சென்றது. தென்னாப்பிரிக்கா பக்கம் வெற்றி வாய்ப்பு பிரகாசமடைந்தது. இந்த நிலையில், ஜஸ்பிரித் பும்ரா வீசிய 18வது ஓவர் ஆட்டத்தில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
ஜஸ்பிரித் பும்ரா மிக நேர்த்தியாக வீசிய அந்த 6 பந்துகள் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டன. 18வது ஓவரில் வெறும் இரண்டே ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது தென்னாப்பிரிக்க வீரர்களால். 18வது ஓவரில் 2 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினார் பும்ரா.
அதைத்தொடர்ந்து 19வது ஓவரை நேர்த்தியாக வீசி உலகத் தரத்திலான பந்துவீச்சாளர் என்பதை நிரூபித்துள்ளார் இளம் வீரர் அர்ஷ்தீப் சிங். அந்த ஓவரில் 4 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டன.
இறுதி ஓவரில், 6 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தால் உலக சாம்பியன் மகுடம் தென்னாப்பிரிக்ககாவை சேரும். இந்த நிலையில், இறுதி ஓவரில் ஒரு வைட் விட்டுக்கொடுத்தாலும், பேட்ஸ்மேனின் உளவியல் எண்ண ஓட்டத்தை மிகச்சரியாக கணித்து அதற்கேற்ப பந்துவீசி இதயங்களை வென்றுவிட்டார் ஹர்திக் பாண்டியா.
அந்த ஓவரின் முதல் பந்தில் சூர்யகுமார் யாதவ் மிக லாவகமாகப் பிடித்த கேட்ச், ஒரு இன்ச் கால் நகர்ந்திருந்தால் பவுண்டரி எல்லைக் கோட்டை தொட்டிருப்பார். அபாயகரமான பேட்டரான மில்லா் சிக்ஸருக்கு அடித்த பந்தை ஓடிக்கொண்டே கையால் பிடித்த பின், கண்ணிமைக்கும் நேரத்தில் பந்தை மேலே தூக்கியெறிந்துவிட்டு, அதன் பின் மீண்டும் பந்தைப் பிடித்தது, மிக முக்கிய திருப்புமுனையாக அமைந்துவிட்டது.
