ஆப்பிரிக்க நாடுகளான மலாவி, ஜிம்பாப்வேக்கு 2,000 டன் பாசுமதி அல்லாத அரிசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
கடந்த 2023 ஜூலை மாதத்தில் இருந்து பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு தடை நீடித்து வருகிறது. உள்நாட்டில் அரிசி விலையைக் கட்டுக்குள் வைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது.
அதே நேரத்தில் குறிப்பிட்ட நாடுகளின் அடிப்படை உணவுத் தேவையைக் கருத்தில் கொண்டு அவற்றுக்கு அரிசி ஏற்றுமதியை மத்திய அரசு அவ்வப்போது அனுமதித்து வருகிறது.
அந்த வகையில் தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவி, தென் ஆப்பிரிக்க பிராந்தியத்தில் உள்ள ஜிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கு தலா 1,000 டன் பாசுமதி அல்லாத அரிசியை ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேசிய கூட்டுறவு ஏற்றுமதி நிறுவனம் மூலம் இந்த அரிசி ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது.
இதற்கு முன்பு நேபாளம், கேமரூன், கினியா, மலேசியா, பிலிப்பின்ஸ், செஷல்ஸ் ஆகிய நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டது.