அ.தி.மு.க ஆட்சியில் 2011-ல் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்துத்துறையில் நடத்துநர், ஓட்டுநர், மெக்கனிக் உள்ளிட்ட வேலைகளை வாங்கித் தருவதாக 81 பேரிடம் பல கோடி ரூபாய் பணம் பெற்று மோசடி செய்தாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கை எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்த நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சண்முகம் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
அப்போது, பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் பணம் கிடைத்துவிட்டதாகவும், சமரசமாக செல்ல விரும்புவதாகவும் தெரிவித்தனர். இதை ஏற்று, செந்தில் பாலாஜி உள்ளிட்ட நான்கு பேர் மீதான வழக்கை ரத்துசெய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தர்மராஜ், ஒய்.பாலாஜி, ஊழல் தடுப்பு அமைப்பு, அமலாக்கத்துறை உள்ளிட்டோர் தொடங்கி 12 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ண முராரி, ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு, சிறப்பு விசாரணை குழுவை அமைத்து செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கை விசாரிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு இருந்த தடைகளும் நீக்கப்பட்டுள்ளன.

