ஜம்முவின் ரியாசி மாவட்டத்தில் கடந்த 9ம் தேதி பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய வழக்கு விசாரணை, தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு கடந்த வாரத்தில் ஜம்முவின் ரியாசி மாவட்டத்தில் பக்தர்கள் பயணித்த பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 3 பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். 41 பேர் படுகாயமடைந்தனர்.

ஜம்முவில் பயங்கரவாத தாக்குதல்
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கதுவா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் சிஆர்பிஎப் வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதேபோல் தோடா மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 7 வீரர்கள் காயமடைந்தனர்.
ஜம்மு பிராந்தியத்தில் அடுத்தடுத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்தைத் தொடர்ந்து சமீபத்தில் அந்த பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலவரம் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் நேற்று உயர்நிலை ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.

ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக அமித் ஷா ஆலோசனை
இதில் பயங்கரவாத செயல்களுக்கு உடனடி பதிலடி கொடுக்குமாறு பாதுகாப்பு அமைப்புகளுக்கு அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டார். இந்நிலையில் ரியாசியில் பேருந்து மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணையை, மத்திய உள்துறை அமைச்சகம் இன்று, என்ஐஏ வசம் ஒப்படைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

👌👌👌👌