நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி தங்களின் அனைத்து பிரசார மேடைகளிலும், `இது இந்திய அரசியலமைப்பை காப்பதற்கான தேர்தல்’ என ஒருமித்தமாக முழங்கியது. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது அனைத்து பிரசார மேடைகளிலும், பத்திரிகையாளர் சந்திப்புகளிலும் கருப்பு-சிவப்பு நிற பாக்கெட் சைஸ் இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் (Constitution of India) புத்தகத்தை கையிலேந்தினார்.
இத்தகைய பிரசாரம் மக்களிடம் எடுபட்டிருக்கிறது என்பதற்கு ஆதாரமாக, 234 இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றிபெற்றிருக்கிறது என்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர். இந்த நிலையில், ராகுல் காந்தி தனது பிரசாரங்களில் காட்டிவந்த கருப்பு-சிவப்பு நிற பாக்கெட் சைஸ் அரசியலமைப்பு சாசன புத்தகம் ஸ்டாக் தீர்ந்திருப்பதாக அதனை வெளியிடும் ஒரே பதிப்பகமான லக்னோவின் ஈஸ்டர்ன் புக் கம்பெனி (EBC) தெரிவித்திருக்கிறது.
அதுவும் இந்த தேர்தல் சமயத்தில் மட்டும், 2023-ம் ஆண்டு முழுவதும் விற்பனையான பிரதிகளுக்கு ஈடான அளவில் பிரதிகள் விற்கப்பட்டிருக்கிறது. அதாவது 5,000 மேற்பட்ட பிரதிகள் விற்கப்பட்டிருப்பதாகவும், தற்போது ஸ்டாக் தீர்ந்துவிட்டதால் அடுத்த பதிப்பு இன்னும் அச்சிடப்படாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 20 செ.மீ நீளம், 10.8 செ.மீ அகலம், 2.1 செ.மீ தடிமன் கொண்ட இந்த புத்தகத்தை 2009 முதல் ஈஸ்டர்ன் புக் கம்பெனி வெளியிட்டுவருகிறது. இதுவரை 16 பதிப்புகள் வெளியாகியிருக்கிறது.
இந்த புத்தகத்தின் முன்னுரையை எழுதியிருக்கும் முன்னாள் அட்டர்னி ஜெனரலும், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான கே.கே.வேணுகோபால், “வழக்கறிஞராக, நீதிபதியாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி ஒவ்வொரு இந்தியரும் இந்தச் சிறிய புத்தகத்தின் பிரதியை வைத்திருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். அளவில் அது சிறியதாக இருந்தாலும் மனித பரிமாணங்களில் பெரியது. எனவே, இந்த புத்தகம் ஒவ்வொரு இந்தியரின் பாக்கெட்டுகளிலும் இருக்கவேண்டும். இந்திய அரசியலமைப்பிலுள்ள கருத்துகளின் மகத்துவத்திலிருந்து உத்வேகம் பெற அவர்களுக்கு இது உதவுகிறது” என்று முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.
இதுகுறித்து பேசியிருக்கும் ஈஸ்டர்ன் புக் கம்பெனியின் இயக்குநர் சுமீத் மாலிக், “இந்திய அரசியலமைப்பின் பாக்கெட் சைஸ் பதிப்பிற்கான யோசனை மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணனிடமிருந்து வந்தது. அதன்படி, வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களில் எளிதாக மேற்கோள்காட்டக்கூடிய வகையிலான பதிப்பை வெளியிட்டோம். 2009-ல், சுமார் 700 முதல் 800 பிரதிகள் விற்கப்பட்டன.
பல ஆண்டுகளாக, 5,000 முதல் 6,000 என சராசரியாக நேர்த்தியான அளவில் பிரதிகள் விற்பனையானது. ஆனால், மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தங்களின் தேர்தல் பிரசாரங்கள், பத்திரிகையாளர் சந்திப்புகளின் போது இந்த புத்தகத்தைக் குறிப்பிட்டபோது, இதன் விற்பனையும், தேவையும் அதிகரித்ததைக் கவனித்தோம்” என்று கூறினார்.


🌹🌹🌹🌹
கமெண்ட் செய்ய விரும்பவில்லை