உத்தர பிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் 40 இடங்களில் ‘இந்தியா’ கூட்டணி முன்னிலையில் உள்ளது. மேற்கு உத்தரபிரதேசத்தில் 29 இட்ங்களில் சமாஜ்வாதி – காங்கிரஸ் கூட்டணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமாக உத்தரபிரதேசத்தில் அதிக இடங்களில் வெற்றிபெறும் கட்சிதான், மத்தியில் ஆட்சி அமைக்கும். இதுதான் உத்தரபிரதேசத்தின் தேர்தல் முடிவு அனைவராலும் எதிர்பார்க்கப்படுவதற்கு காரணம். 2014 மற்றும் 2019 தேர்தல்களில் பாஜக இங்கு அதிக இடங்களை கைப்பற்றி மத்தியில் ஆட்சி அமைந்தது. 2014ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் பாஜக 71 இடங்களில் வெற்றிபெற்றது. 2009 தேர்தலுடன் ஒப்பிடும்போது, அந்த கட்சி கூடுதலாக 61 இடங்களை அப்போது கைப்பற்றி இருந்தது. 2019 தேர்தலில் பாஜகவுக்கு 62 இடங்கள் கிடைத்தன. இது 2014 தேர்தலுடன் ஒப்பிடுகையில் 9 இடங்கள் குறைவாகும்.
இந்த தேர்தலில் பாஜகவுக்கு உத்தர பிரதேசத்தில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மதியம் 1 மணி நிலவரப்படி அந்த கட்சி 36 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. மொத்தம் உள்ள 80 இடங்களில் பாஜக 75 தொகுதிகளில் போட்டியிட்டது. மீதமுள்ள 5 இடங்களில் அப்னாதளம், ராஷ்ட்ரிய லோக் தளம் ஆகிய கூட்டணி கட்சிகள் போட்டியிட்டன.
வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி தொடக்கத்தில் பின்னடைவை சந்தித்து, பின்னர் கூடுதல் வாக்குகளை பெற்று முன்னிலை பெற்றார். அமேதி தொகுதியில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, சுல்தான்பூரில் போட்டியிட்ட மேனகா காந்தி உள்ளிட்ட முக்கிய பாஜக வேட்பாளர்கள் பின்னடைவை சந்தித்தார்கள். இது பாஜக தலைவர்களுக்கு மிகப்பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
ராமர் கோயில் கட்டியதும், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தியதற்காக பாஜகவுக்கு கூடுதல் தொகுதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ‘இந்தியா’ கூட்டணியின் சிறப்பாக செயல்பாடுகளால், பாஜகவின் கணக்கு தப்பாகியுள்ளது. குறிப்பாக, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, ஜே.பி. நட்டா, யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தாலும், அது பெரிதாக கைகொடுக்கவில்லை.
மறுபுறம் உத்தரபிரதேசத்தில் பாஜகவுக்கு ஆதரவாக ஆர்.எஸ்.எஸ். போதுமான அளவு வேலை பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது. பிரதமர் மோடி மீது ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதால், பல இடங்களில் அவர்கள் ஒதுங்கி நின்றே வேடிக்கை பார்த்ததாகவும், அதுவே தற்போதையை பின்னடைவுக்கு முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது. அதேபோல், உத்தரபிரதேசத்தில் பெரும்பான்மையாக இருக்கும் ராஜ்புத் சமூகத்தினர் பாஜகவுக்கு எதிரான மனநிலையில் இருப்பதும் இந்த தேர்தல் முடிவுகளில் எதிரொலித்து இருப்பதாக கூறப்படுகிறது.
மறுபுறம் களத்தை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, பாஜகவை வீழ்த்த சமாஜ்வாதி கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் பல்வேறு வியூகங்களை அமைத்தார். ராகுல் காந்தியுடன் இணைந்து அவர் நடத்திய கூட்டங்கள் ‘இந்தியா’ கூட்டணிக்கு தற்போது அமோக வெற்றியை கொடுத்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி, 42 இடங்களில் முன்னிலையில் உள்ளது. 62 தொகுதிகளில் போட்டியிட்ட அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 35 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இது கடந்த முறையைவிட 30 இடங்கள் அதிகமாகும். 2019 தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வெறும் 5 இடங்களை மட்டுமே வென்றது. இந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் போட்டியிட்டது. அதில் 7 இடங்களில் முன்னிலையில் உள்ளது. கடந்த தேர்தலைவிட அந்த கட்சி தற்போது 6 இடங்களில் கூடுதலாக முன்னிலை பெற்றுள்ளது. 2019ல் சோனியா காந்தி மட்டுமே வெற்றிபெற்றார். ராகுல் காந்தி அமேதி தொகுதியில் தோல்வியடைந்தார். தற்போது, ரேபரேலி தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார்.
ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் மற்றும் ராஜ்புத் சமூகத்தினரை கண்டுகொள்ளாமல் இருந்த பாஜகவுக்கு, உத்தர பிரதேச தேர்தல் களம் வேறு மாதிரியான முடிவுகளை கொடுத்துள்ளது. அதே நேரத்தில் மக்களின் எண்ண ஓட்டத்தை அறிந்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட ‘இந்தியா’ கூட்டணி, அதிக இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.
.
