ஜம்மு காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள சஃபாகதல் பகுதியில் வசித்து வந்த உள்ளூர் மக்கள் ஜீலம் நதியில் தவறி விழுந்த ஏழு வயது குழந்தையை உயிரோடு மீட்டுள்ளனர்.
ஆற்றின் கரையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென்று ஆற்றுக்குள் விழுந்து நீரோட்டத்தில் அடித்துச் செல்வதைப் பார்த்த அங்கிருந்த சிலர், சற்றும் யோசிக்காமல் ஆற்றுக்குள் குதித்து சிறுவனை காப்பாற்றிய சம்பவம் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது. சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் பலரது கண்களுக்கும் தெரியாத சூப்பர் ஹீரோக்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்பது இந்த சம்பவத்தின் மூலம் நிரூபனமாகியுள்ளது.
இதுதொடர்பான முழுமையான விடியோ ஒன்று பிரபல சமூக ஊடகமான X தளத்தில் வெளியாகியுள்ளது. சிறுவன் ஆற்றுக்குள் விழுந்த செய்தி கேட்டதுமே அக்கம்பக்கத்தில் உள்ள அனைவருமே அலறியடித்து ஓடி வந்துள்ளனர். அங்கிருந்த ஒருவர் தன் உயிரைப் பற்றிக்கூட யோசிக்காமல் ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த சிறுவனை நோக்கி நீந்திச் சென்று, அவனை கையோடு அணைத்து ஆற்றங்கரைக்கு கொண்டு வந்தார். அங்கு காத்திருந்த பலரும் சிறுவன் உயிரோடு இருப்பதாகவும், உடனடியாக சிபிஆர் சிகிச்சை கொடுத்தால் அவன் பிழைத்துக்கொள்வான் என்றும் கூறினர். இவை அனைத்துமே இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. அதன்பின்னர் அங்கிருந்தவர்கள் சிறுவனிடன் எந்த ஊரைச் சேர்ந்தவன் என்றும் அவனது விவரங்களையும் கேட்டறிந்தனர்.
இதையும் படிக்க:
இந்தியாவில் அதிகம் அசைவம் சாப்பிடும் மாநிலம் எது தெரியுமா? தமிழ்நாடு எந்த இடம்?
இந்த மாதத்தில் மட்டுமே இதுபோன்ற சம்பவம் மூன்றாவது முறையாக நடக்கிறது. மே மாதம் 16-ம் தேதி வடக்கு காஷ்மீர் கிராமத்தைச் சேர்ந்த 55 வயது முதியவர் ஒருவர் ஜீலம் நதியில் தவறி விழுந்து பலியானார். இவரது பெயர் அப்துல் ரஹீம் லோன் என்றும் தண்ணீர் பிடிப்பதற்காக ஆற்றிற்கு சென்றபோதே தவிறி விழுந்து இவர் இறந்துள்ளார் என்ற செய்தியும் பின்னரே கிடைத்தது.
#Kashmir: Locals saved 7 year old child after he slipped in river Jhelum river at Safakadal in Srinagar. pic.twitter.com/iaci0p6nC1
— Jammu Kashmir News Network 🇮🇳 (@TheYouthPlus) May 26, 2024
இன்னொரு சம்பவத்தில் காஷ்மீரில் உள்ள புல்வாமா பகுதியில் படகு கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த இருவரை காணவில்லை என்றும் ஏழு பேர் உயிரோடு மீட்கப்பட்டுள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது. காணாமல் போன இருவரும் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு கூட ஏப்ரல் மாதத்தில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என மொத்தம் 26 பேர் பயணம் செய்த படகு ஒன்று ஜீலம் நதியில் கவிழ்ந்ததில் ஏழு பேர் இறந்ததோடு பலரை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏப்ரல் 16-ம் தேதி நிகழ்ந்த இந்த துயர சம்பவத்தின் போது 15 பள்ளிக் குழந்தைகளும் இந்தப் படகில் பயணம் செய்துள்ளனர். ஜீலம் நதியின் நடுவே கட்டப்பட்டு வரும் தூனில் மோதியே படகு கவிழ்ந்த்தாக பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன.
.
