ஊழல்வாதிகளிடம் இருந்து பணத்தை பறித்து உரியவர்களிடம் ஒப்படைப்பேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். நியூஸ் 18 குழுமத் தொலைக்காட்சிக்கு பிரதமர் மோடி 4 ஆவது முறையாக பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் களம் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் நியூஸ் 18 குழுமத்திற்கு பிரதமர் மோடி 4 ஆவது முறையாக பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ், வலதுசாரி, குடும்ப ஆட்சி என பல மாடல்களை நாடு பார்த்துவிட்டதாகவும், ஆனால் பாஜக மாடலைதான் மக்கள் தேர்வு செய்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்த முறை நடக்கும் மக்களவைத் தேர்தலில் தென்னிந்தியா மட்டும் தனது இலக்கு இல்லை என்று கூறியுள்ள பிரதமர் மோடி, ஒட்டு மொத்த தேசமும் தனது இலக்குதான் என்றார்.
மத்தியில் 400 உறுப்பினர்களுடன் தீர்க்கமாக ஆட்சியை பாஜக அமைப்பது உறுதி என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அந்தமான் நிக்கோபரில் இம்முறை பாஜக கண்டிப்பாக வெற்றி பெறும் என்றும் கூறினார்
ஊழல் செய்யவும் மாட்டேன், ஊழல் செய்ய விடவும் மாட்டேன் என்றும் கூறிய பிரதமர் மோடி, ஊழல்வாதிகளிடம் இருந்து பணத்தை பறித்து உரியவர்களிடம் ஒப்படைப்பேன் என்றும் தெரிவித்தார்.
கிரிமினல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள கெஜ்ரிவாலிடம் சார்லஸ் சோப்ராஜை போல் சில ஊடகங்கள் பேட்டி காண்பதேன் என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பி உள்ளார்.
மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜியின் அரசாங்கம் அனைத்து அதிகாரித்தையும் கொண்டிருப்பதாகவும், ஆனால் தவறான திசையில் அரசாங்கம் செயல்படுவதாகவும் பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். மேற்குவங்கத்தில் பாஜக மிகப்பெரிய வேகத்தில் வளர்ந்து வருவதாக கூறிய மோடி, வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மேற்குவங்கத்தில் பாஜக வளர்ந்து வருவதாக கூறியுள்ளார்.
.
