ஆளுங்கட்சி மீதான அதிருப்தி, விவசாயிகள் போராட்டம், மல்யுத்த வீரர்களின் போராட்டம், வேலையில்லா திண்டாட்டம், அக்னிபாத் திட்டம் போன்றவற்றுடன் ஆம் ஆத்மியுடன் அமைந்துள்ள வலுவான கூட்டணியும் சேர ஹரியாணா, தில்லி தொகுதிகளில் பெரும்பாலானவற்றைக் கைப்பற்றிவிட முடியும் என்று காங்கிரஸ் நம்புகிறது.
ஆறாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் தொகுதிகளில் மீதியுள்ள தொகுதிகள் அனைத்தும் திரிணாமுல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சி போன்றவற்றிடம் இருக்கின்றன. ஜம்மு – காஷ்மீரில் அனந்தநாக் – ரஜௌரி தொகுதி எல்லைகள் மாற்றியமைக்கப்பட்டவொன்று.
இன்று களம் காண்பவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள்: ஹரியாணாவில் கர்னால் தொகுதியில் பதவி விலகிய முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டர் (பா.ஜ.க.) போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் இளைஞரான திவ்யான்சு புத்திராஜா போட்டியிடுகிறார்.
ஜம்மு – காஷ்மீரிலுள்ள அனந்தநாக் – ரஜௌரியில் மக்கள் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் மெஹ்பூபா முப்தியும் ஒடிசாவின் சம்பல்பூரில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானும் உத்தரப் பிரதேசம் சுல்தான்பூரில் பாரதிய ஜனதா சார்பில் மேனகா காந்தியும் போட்டியிடுகின்றனர்.
