தமிழகத்தில், நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததிலிருந்தே, “அமைச்சரவை மாறப் போகிறது; அமைச்சர்களின் இலாகாக்களைப் பந்தாடப் போகிறது தலைமை” என தி.மு.க வட்டாரத்தில் பேசுபொருளாகி இருக்கிறது. தேர்தல் ரிசல்ட் தேதி நெருங்கிவரும் சூழலில், அந்தப் பேச்சு ரொம்பவும் தீவிரமாகியிருக்கிறது. “அமைச்சரவை மாற்றம் மனநிலையில்தான் இருக்கிறதா ஆட்சி மேலிடம்..?, யாருக்கு “செக்’, யாருக்கு ‘ஜாக்பாட்’…”, விவரமறிய அறிவாலயத்தைச் சுற்றிவந்தோம்.

நம்மிடம் பேசிய தி.மு.க-வின் சீனியர் தலைவர்கள் சிலர், “நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போதே, சில அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்களின் செயல்பாடுகள் மீது தலைமைக்கு அதிருப்தி ஏற்பட்டது. நாமக்கல்லில், தலைமை கண்டித்தும்கூட அமைச்சர் மதிவேந்தனும் நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் மதுரா செந்திலும் உருப்படியாக தேர்தல் வேலையைப் பார்க்கவில்லை. ஈரோட்டில், அமைச்சர் முத்துசாமி சுணங்கிவிட்டதாக தலைமைக்குப் பலமுறை புகார் சென்றும், தலைமையிலிருந்து முத்துசாமியை எச்சரித்தும்கூட, அவர் மாறவில்லை.
தன் மகன் திலீப்புக்குச் சீட் கேட்டுக் கிடைக்காத விரக்தியில், இராமநாதபுரம் தொகுதியில் தேர்தல் பணியில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை அமைச்சர் ராஜகண்ணப்பன். இதுபோல, அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் மீது தேர்தல் சமயத்தில் புகார்கள் வரிசைக்கட்டின. அப்புகார்களை விசாரிக்க கட்சிக்குள் ஒரு குழுவை அமைத்திருக்கிறது கட்சி மேலிடம். உளவுத்துறையும் தனியாக ஒரு ரிப்போர்ட்டை தலைமைக்கு அளித்திருக்கிறது. அதன்படிதான், அமைச்சரவையில் மாற்றங்கள் நிகழலாம் எனச் செய்திகள் றெக்கைக் கட்டுகின்றன.