நாடாளுமன்றத்தில் கடந்த காலங்களில் பா.ஜ.க-வுக்கு ஆதரவு தெரிவித்துவந்த, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சியை, இந்தத் தேர்தலில் பிரதமர் மோடி கடுமையாக எதிர்த்துவருகிறார். ஒடிசா பிரசாரங்களில் முதல்வர் நவீன் பட்நாயக்கை தாக்கிவந்த பிரதமர் மோடி தற்போது, நவீன் பட்நாயக்கின் நம்பிக்கைக்குரியவராகக் கூறப்படும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.கே.பாண்டியனை விமர்சிப்பதாகத் தமிழ்நாட்டையும் சேர்த்துப் பேசியிருக்கிறார்.
முன்னதாக, ஒடிசாவில் இருக்கும் 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பூரி ஜெகந்நாத் கோயிலில் நேற்று வழிபட்டுவிட்டு பின்னர் பிரசாரத்தில் பேசிய மோடி, “வீட்டு சாவி தொலைந்தால், ஜெகன்நாதரை வணங்கிவிட்டுத் தேடினால் அடுத்த சில மணிநேரத்தில் சாவி கிடைத்துவிடும். ஆனால், இங்கு ஜெகன்நாத் கோயிலின் கருவூலமான ரத்ன பண்டரின் சாவி காணாமல் போய் ஆறு வருடங்கள் ஆகிவிட்டது. அந்த சாவி தமிழ்நாட்டுக்கு சென்றுவிட்டதால், அதுதொடர்பான விசாரணை அறிக்கை ஆறு வருடங்களாக வெளியிடப்படாமலிருக்கிறது” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், தமிழ்நாட்டு மக்களின்மீது திருடர்கள் என்ற பழியை மோடி சுமத்தலாமா என்று கண்டனத்தோடு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கேள்வியெழுப்பியிருக்கிறார். இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேர்தல் பரப்புரையில் நாகரிக வரம்புகளை மீறாமல், கொள்கை, கோட்பாடுகள், செயல்திட்டங்கள்மீது ஆக்கப்பூர்வமான விமர்சனங்களையும் தங்களது ஆட்சியின் சாதனைகளையும் முன்வைத்து வாக்கு சேகரிப்பதில் முன்னுதாரணமாகத் திகழ வேண்டிய பிரதமர் நரேந்திர மோடி, வெறுப்புப் பேச்சுகளின் மூலம் மக்களிடையே பகை உணர்வையும், மாநிலங்களுக்கு இடையே குரோதத்தையும் தூண்டி வருவது நாட்டுக்கு நல்லதல்ல.

முன்னதாக, உத்தரப்பிரதேச மக்களை இழித்தும் பழித்தும் தென்னிந்தியர்கள் பேசுவதாகத் தமிழ்நாட்டு மக்கள் மீது அபாண்டமான பழியைச் சுமத்தியிருந்தார். இது ஆபத்தானது என்று கண்டனம் தெரிவித்தபோதும், தமிழ்நாட்டு மக்களை மோசமானவர்களாக இழித்தும் பழித்தும் பேசும் வழக்கத்தை மோடி நிறுத்திக்கொள்ளவில்லை. ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, புகழ்பெற்ற ஜெகன்நாதர் ஆலயத்தின் பொக்கிஷ அறையின் தொலைந்துபோன சாவிகள் தமிழ்நாட்டில் இருப்பதாகப் பேசியிருக்கிறார். இது, கோடிக்கணக்கான மக்களால் வணங்கப்படும் புரி ஜெகன்நாதரை அவமதிப்பதோடு, ஒடிசா மாநிலத்தோடு நல்லுறவும் நேசமும் கொண்ட தமிழ்நாட்டு மக்களை அவமதிப்பதும் புண்படுத்துவதுமாகும்.
ஜெகன்நாதர் மீது அளவற்ற பக்தி கொண்ட ஒடிசா மக்களைத் தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராகத் தூண்டும் பேச்சல்லவா இது… ஆலயத்தின் பொக்கிஷத்தைக் களவாடும் திருடர்கள் என்ற பழியைத் தமிழ்நாட்டு மக்கள் மீது பிரதமர் மோடி சுமத்தலாமா… தமிழ்நாட்டு மக்களை நேர்மையற்றவர்கள் என்று கூறுவது, தமிழ்நாட்டை அவமதிப்பது அல்லவா… தமிழர்கள் மீது மோடிக்கு இத்தனை காழ்ப்பும் வெறுப்பும் ஏன்…

தமிழ்நாட்டுக்கு வரும்போது தமிழ்மொழியை உயர்வாகப் போற்றுவதாகப் பேசுவதும், தமிழர்களைப் போன்ற அறிவாளிகள் இல்லை என்று பாராட்டுவதும், அதேநேரத்தில் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஒடிசா போன்ற மாநிலங்களில் வாக்கு சேகரிக்கும்போது தமிழ்நாட்டு மக்களைத் திருடர்களைப் போலவும், வெறுப்பு மிகுந்தவர்களாகவும் அந்த மாநிலங்களுக்கு எதிரானவர்களாகவும் பேசுவது இரட்டை வேடம். இதை மக்கள் புரிந்து கொள்வார்கள். வாக்குக்காகத் தமிழ்நாட்டையும் தமிழர்களையும் அவதூறு செய்வதைப் பிரதமர் நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88
