டெல்லி ஐடிஓ பகுதியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் வழக்கமான பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்த நிலையில், நேற்று மதியம் 3 மணியளவில் திடீரென கட்டடத்தின் நான்காவது மாடியில் தீ பற்றியது.
ஏசி கம்ப்ரஸரில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், நான்காவது தளம் முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்ததால், அங்கிருந்த ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர்.
வெளியேற முடியாத சில பெண் ஊழியர்கள், ஜன்னலை திறந்து அங்குள்ள சன்ஷேட் பகுதியில் தஞ்சம் புகுந்தனர். தகவல் அறிந்து விரைந்த வந்த தீயணைப்புத்துறையினர், உயிர் பயத்தில் இருந்த பெண் ஊழியர்களை ஏணிகள் மூலம் மீட்டனர்.
7 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அலுவலக கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ஒருவர் உயிரிழந்தார்.
தொடர்ந்து 21 தீயணைப்பு வாகனங்கள் மூலம் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனிடையே, முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பலாகி இருக்கலாம் என கூறப்படும் நிலையில், தீ விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதனிடையே, டெல்லி வருமானவரித்துறை அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து பல்வேறு யூகங்கள் எழுந்த நிலையில், இதுகுறித்து வருமான வரித்துறை தானாக முன்வந்து விளக்கமளித்துள்ளது.
வருமானவரித்துறை அலுவலக தீ விபத்தை அடுத்து, அதிக வரிசெலுத்துவோரின் முக்கிய ஆவணங்கள் தீக்கிரையானதாக சமூக வலைதலங்களில் செய்திகள் பரவின. இதனைமறுத்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள வருமான வரித்துறை, நிர்வாகத்திற்காக பயன்படுத்தப்படும் அறை எண் 325-ல் தீப்பிடித்ததாகவும்,
உடனடியாக தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
எந்தவிதமான ஆவணங்களுக்கும் சேதம் ஏற்படவில்லை எனவும்,
அனைத்து வருமான வரி செலுத்துவதும் ஆன்லைன் முறையில் இருப்பதால், வரி செலுத்துவோர் தொடர்பான தரவுகளுக்கு பாதிப்புகள் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்தில் உயிரிழந்த அலுவலக கண்காணிப்பாளருக்கு வருமான வரித்துறை இரங்கல் தெரிவித்துள்ளது.
.
