இப்படியிருக்க, அண்ணாமலை மீது வழக்கு பதிவுசெய்ய ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதாகவும், அதன்படி அவர்மீது வழக்கு பதிவுசெய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்திருப்பதாகவும் பொதுத்துறை செயலாளர் நந்தகுமார் பெயரில் கடந்த சில நாள்களுக்கு முன்பு 25.04.2024 தேதியிட்ட அறிக்கை வெளியாகியிருந்தது.
அதைத்தொடர்ந்து அண்ணாமலை நேற்று தனது X சமூக வலைதளப் பக்கத்தில், அந்த அறிக்கையை ஷேர் செய்து, உண்மையைப் பேசியதற்காக வழக்கு போடுகிறார்கள் என்றும், எத்தனை வழக்குகள் போட்டாலும் தான் பேசுவதை யாராலும் தடுக்க முடியாது என்றும் ட்வீட் செய்திருந்தார். இந்த நிலையில், அண்ணாமலை வழக்கு தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என ஆளுநர் மாளிகை மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

அந்த அறிக்கையில், “அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கில் வழக்கு பதிவுசெய்ய ஆளுநர் அனுமதி அளித்திருப்பதாகப் பரவிவரும் செய்தி குறித்து ஆளுநர் மாளிகைக்கு கடந்த இரண்டு நாள்களாகப் பொதுமக்களிடமிருந்து பரபரப்பு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. அண்ணாமலைக்கு எதிரான கிரிமினல் வழக்கு குறித்து ஆளுநர் மாளிகை எந்தவொரு தகவலும் அறிந்திருக்கவில்லை. மேலும், அதுதொடர்பான அனுமதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை”‘ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

