தெலங்கானாவில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி,“தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து, அம்பானி – அதானியைப் பற்றிப் பேசுவதையும், அவர்களின் பெயரைப் பயன்படுத்துவதையும் ராகுல் காந்தி நிறுத்திவிட்டார். அம்பானி – அதானியிடமிருந்து காங்கிரஸ் முகாமுக்கு எவ்வளவு கறுப்புப் பணம் வந்திருக்கிறது… மூட்டை மூட்டையாக ரூபாய் நோட்டுகள் நிரப்பப்பட்ட டெம்போ காங்கிரஸுக்குக் கிடைத்துவிட்டதா?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு காங்கிரஸ் கடுமையாக எதிர்வினையாற்றியிருந்தது.

இந்த நிலையில், மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “அதானி-அம்பானியிடமிருந்து பணம் கிடைத்திருந்தால், நான் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பேன். எனது பிரசாரத்தை நடத்த நிதி தேவைப்படும் பி.பி.எல் (வறுமைக் கோட்டிற்கு கீழ்) எம்.பி-யாக இருக்கிறேன். டெம்போ வேண்டாம், அதானி என் வீட்டிற்கு ஒரு பை நிறைய பணம் அனுப்பினால் போதும். அவர்கள் பணம் அனுப்பாததால் தான் அவர்களுக்கு எதிராக பேசுகிறோம்… அவர்கள் பணம் அனுப்பினால் அதன் பிறகு பரிசீலிப்போம் (நகைச்சுவையாக பேசி சிரித்தார்) அதானி-அம்பானி விவகாரத்தில் காங்கிரஸின் நிலைப்பாடு என்ன என்பது அனைவருக்கும் தெரியும். ” எனக் குறிப்பிட்டார்.
இது குறித்து கருத்து தெரிவித்த அமித் மாளவியா,“காங்கிரஸின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் பேட்டி அரசியல் மிரட்டலுக்குச் சற்றும் குறைவானவையல்ல. அவர் தனது சமீபத்திய பேட்டியில், காங்கிரஸின் முகமூடியை அவிழ்த்து, அதானியைப் பற்றி பேசுவதை நிறுத்துவோம் என்று கூறுகிறார். அம்பானி காங்கிரஸுக்கு பணம் கொடுத்ததால் ஏற்கெனவே ராகுல் காந்தி அவர்கள் குறித்து பேசுவதை நிறுத்திவிட்டார். பாராளுமன்றத்தில் இந்திய வணிகங்களைத் தாக்குவதற்காக துபாயைச் சேர்ந்த தொழிலதிபரிடமிருந்து பணம் மற்றும் விலையுயர்ந்த பரிசுகளை வாங்கியதாகக் கூறப்படும் மஹுவா மொய்த்ராவின் செயல்களுக்கு இது சமம்” எனத் தெரிவித்திருக்கிறார்.
