10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் மாணவி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம் மடிகேரி தாலுகாவை சேர்ந்த சுப்ரமணி என்பவரின் 15 வயதான மகள் மீனா. சூர்லப்பிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த வியாழன் அன்று பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், மீனா அதிக மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெற்று இருந்தார். மலைவாழ் மக்கள் இனத்தை சேர்ந்த மீனா அதிக மதிப்பெண்கள் எடுத்ததால் அவரை பள்ளிக்கு அழைத்து பரிசு வழங்கி கவுரவித்துள்ளனர். வீட்டிற்கு வந்து பெற்றோருடன் மீனா மகிழ்ச்சியாக இருந்தபோது தான் திடீரென அந்த கொடூர சம்பவம் அரங்கேறியது. அதே பகுதியை சேர்ந்த ஓம்காரப்பா என்ற இளைஞர் மீனாவின் வீட்டிற்குள் புகுந்து அவரை வெட்டிக் கொலை செய்தார்.
பெற்றோர் முன்னிலையில் மீனாவை அரிவாளால் வெட்டிக்கொலை செய்து தலையைத் துண்டித்து வீசியுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த குடகு போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் கொலைக்கான காரணம் தெரியவந்தது. 15 வயதே ஆன மீனாவிற்கும், ஓம்காரப்பாவிற்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறுவதாக இருந்தது. மைனர் பெண்ணின் திருமண ஏற்பாடுகள் குறித்து தகவல் அறிந்த சமூக நலத்துறை அதிகாரிகள் மீனாவின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். 18 வயது நிரம்பிய பிறகே மீனாவுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அவரது பெற்றோரிடம் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
அதன்படி செய்வதாக மீனாவின் பெற்றோர் உறுதியளிக்க, சமூக நலத்துறை அதிகாரிகள் அங்கிருந்து சென்று விட்டனர். அதிகாரிகளின் வற்புறுத்தலால் திருமண நிச்சயதார்த்தத்தை மீனாவின் பெற்றோர் நிறுத்தி விட்டனர். தனது திருமண நிச்சயதார்த்தம் நின்று போன ஆத்திரத்தில் இருந்த ஓம்காரப்பா, 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியான சில மணி நேரங்களிலேயே மீனாவை கொலை செய்தது தெரிய வந்தது.
இந்நிலையில், கொலை செய்து விட்டு தலைமறைவாகியுள்ள ஓம்காரப்பாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
.
