தமிழகத்தில் ஓடும் ஆறுகளில் முக்கியமானது தாமிரபரணி. ஆண்டு முழுவதும் தண்ணீர் ஓடக்கூடிய இந்த ஆற்றுக்கும் எந்த மாநிலத்துடனும் தண்ணீர் சர்ச்சை கிடையாது. காரணம், மேற்குத் தொடர்ச்சி மலையின் உச்சியில் பூங்குளம் என்ற இடத்தில் உற்பத்தியாகும் இந்த ஆறு, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 149 கி.மீ தூரம் பாய்ந்து புன்னக்காயலில் கடலில் கலக்கிறது.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் தாமிரபரணி திகழ்கிறது. ஆனால், இந்த ஆற்றில் கழிவுகள் அதிகமாகக் கலப்பதால் அதன் தன்மை மாறி வருவது பொதுமக்களை அதிச்சிக்கு உள்ளாகி வருகிறது அண்மையில் நெல்லை மாவட்ட நிர்வாகம் நடத்திய ஆய்வில், இந்த ஆறு நெல்லை நகருக்குள் வரும்போது குளிப்பதற்கு உகந்ததாக இருக்கிறதே தவிர குடிப்பதற்குத் தகுதியானதாக இருக்கவில்லை.
அதனால் தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது. நெல்லை மாநகரப் பகுதிகளில் மட்டும் 20-க்கும் அதிகமான இடங்களில் கழிவுநீர் நேரடியாக ஆற்றில் கலப்பதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. அத்துடன், மருத்துவமனை கழிவுகள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் எண்ணெய் கலந்த கழிவுகளும் ஆற்றில் கலப்பதால் கூவம் போல மாறத் தொடங்கியிருக்கிறது.

இந்த நிலையில், ஆற்றில் கழிவுகள் கலப்பது தொடர்பாக மாநகராட்சி கூட்டத்திலும் கவுன்சிலர்கள் பலரும் கேள்வி எழுப்பினார்கள். ஆற்றைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டியது பற்றி கவுன்சிலர்களும் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், நெல்லை மாநகராட்சி ஆணையரான சிவ கிருஷ்ணமூர்த்தி நேற்று தாமிரபரணி ஆற்றில் கழிவுகள் கலப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்த இடங்களில் அதிரடியாக நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
எந்தெந்த இடங்களில் கழிவுகள் கலக்கின்றன என்பதையும் அதைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இது குறித்து ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டதற்கு, “தாமிரபரணி ஆற்றில் கழிவுகள் கலப்பது தொடர்பாக தொடர்ந்து புகார்கள் வந்ததால் களத்தில் ஆய்வு செய்வதற்காகச் சென்றேன்.

கைலாசபுரம், உடையார்பட்டி, மீனாட்சிபுரம், சிந்துபூந்துரை உள்ளிட்ட பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்தேன். அப்போது சில இடங்களில் கழிவுகள் கலப்பதைப் பார்க்க முடிந்தது. சிறிய வீடுகளில் கழிப்பிட வசதிகள் இல்லாததால் நேரடியாக பாதாளச் சாக்கடையில் கலக்கிறார்கள். அதைத் தடுப்பதுடன், ஆற்றைச் சுத்தமாக வைத்திருப்பது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
நெல்லையில் தற்போது செயல்பாட்டில் இருக்கும் பாதாளச் சாக்கடை திட்டமானது 2007-ல் போடப்பட்டது. தற்போதைய மகக்ள் தொகைக்கு ஏற்ப 668 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பாதாளச் சாக்கடை திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். அந்தப் பணிகள் முடிவடையும்போது கழிவுகள் ஆற்றில் கலப்பது முழுமையாகத் தடுக்கப்படும்.

கழிப்பிட வசதி இல்லாததால் கழிவுகள் நேரடியாக வெளியேறும் சிறிய வீடுகளின் கழிவுநீரை சுத்தப்படுத்தி அதை பம்பிங் செய்து பாதாளச் சாக்கடைக்குள் திருப்ப ஏற்பாடு செய்ய இருக்கிறோம்., அடுத்த இரு மாதங்களில் இவை அனைத்தும் முடிவடைந்ததும் தாமிரபரணி ஆற்றில் கழிவுகள் கலப்பது முழுமையாகத் தடுக்கப்படும்” என்றார்.

