ஜனார்த்தன ரெட்டியின் வருகை நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வலிமை சேர்ப்பதாக இருக்கும் என்று எடியூரப்பா கூறினார்.
கர்நாடகாவில் சுரங்க தொழிலதிபரும், கல்யாண ராஜ்ய பிரகதி பக்சா கட்சியின் ஒரே எம்.எல்.ஏ.வுமான ஜி.ஜனார்த்தன ரெட்டி தன் மனைவி அருணா லட்சுமி மற்றும் ஆதரவாளர்களுடன் இன்று பா.ஜ.க.வில் இணைந்தார். அவரது கட்சியையும் பா.ஜ.க.வுடன் இணைத்தார். பெங்களூருவில் பா.ஜ.க. தலைவர்கள் பி.எஸ்.எடியூரப்பா, விஜயேந்திர எடியூரப்பா ஆகியோரின் முன்னிலையில் இந்த இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜனார்த்தன ரெட்டி, “இன்று எனது கட்சியை பா.ஜ.க.வுடன் இணைத்து, பா.ஜ.க.வில் இணைந்துள்ளேன். பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆவதற்கு ஆதரவு அளிப்பதற்காக மீண்டும் தாய்க்கட்சிக்கு திரும்பியதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். எந்த நிபந்தனைகளும் இல்லாமல் கட்சியில் இணைந்தேன். எனக்கு எந்த பதவியும் தேவையில்லை” என்றார்.

கட்சியில் இணைந்த ஜனார்த்தன ரெட்டியை எடியூரப்பா வரவேற்று வாழ்த்தினார். அவரது வருகை நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வலிமை சேர்ப்பதாக இருக்கும் என்றும் கூறினார்.
இதற்கு முன்பு பல ஆண்டுகள் பா.ஜ.க.வில் இருந்த ஜனார்த்தன ரெட்டி, 2008-ல் எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவியேற்றபோது அவரது மந்திரி சபையில் இடம் பெற்றிருந்தார். கனிம சுரங்க முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டபின் பா.ஜ.க.வுடனான தொடர்பில் இருந்து விலகினார். 2022-ம் ஆண்டு கல்யாண ராஜ்ய பிரகதி பக்சா என்ற கட்சியைத் தொடங்கினார். கடந்த சட்டமன்றத் தேர்தலில், கங்காவதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இப்போது மீண்டும் பா.ஜ.க.வில் ஐக்கியமாகி உள்ளார்.
கர்நாடகாவில் உள்ள மக்களவை தொகுதிகளுக்கு ஏப்ரல் 26 மற்றும் மே 7 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.

கர்நாடகம் மட்டுமல்ல முழு இந்தியாவிலும் பிரபலமானவர்கள் இந்த ரெட்டி சகோதரர்கள். சகோதர்களில் ஒருவரான ஜனார்தன் ரெட்டி பாரதிய ஜனதாவின் முன்னாள் அமைச்சர். இவரது மகளுக்கு 16-11-2016 திருமணம் நடந்தது. உண்மையில் அதை திருமணம் என்று சொல்வது நமக்கு வேறு வார்த்தைகள் இல்லை என்பதால்தான். இயக்குநர் ஷங்கரின் சினிமா நிஜத்தில் நடந்தால் எப்படி இருக்குமோ அதையும் தாண்டியது ரெட்டியின் விழா.
சுருங்கச் சொன்னால் இந்த மெகா திருமணத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா? 500 கோடி ரூபாய்க்கு மேல் . மோடி அரசின் கருப்பு பண நடவடிக்கையால் உழைத்து வாழும் பல குடும்பங்களில் திருமணங்கள் பிரச்சனைக்குள்ளாகியிருக்கின்றன. பல திருமணங்கள் நின்று போயிருக்கின்றன. செலவுக்கு புதிய பணமில்லாமல், பழைய பணத்தை மாற்ற முடியாமல் பல பெற்றோர் பித்துப்பிடித்த நிலையில் இருக்கின்றனர். ஆனால் ரெட்டி சகோதர்கள் பிரதமர் மோடி அவர்களின் நண்பர்கள் என்பதால் அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
2008-13 கர்நாடக பாஜக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது, 2011ல் பெல்லாரியில் நடந்த சட்டவிரோத சுரங்க ஊழலில் அவரது பங்கு பிரதானமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுரங்க வழக்கில் ஜாமீன் பெற சிறப்பு நீதிமன்ற நீதிபதிக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. சட்டவிரோத சுரங்கம் தொடர்பான லோக்ஆயுக்தா அறிக்கை மாநிலத்தை உலுக்கிய இரண்டு மாதங்களுக்குப் பிறகு, செப்டம்பர் 2011 இல் சிபிஐயால் கைது செய்யப்பட்டார்.பின்பு 2022-ல் பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கினார்.
₹35000/- கோடி சுரங்க ஊழலுக்காக கைதாகி, பெயிலில் வெளிய வர, ஜட்ஜ்க்கு ₹50 கோடி லஞ்சம் வழங்க முயல, அதில் அந்த நீதிபதியும் கைதாக, அப்படிபட்ட, ஜனார்த்தன ரெட்டியை வாரி அணைத்து, எம்பி சீட் வழங்கியுள்ளது பாஜக.
