டெல்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் பாஜகவுக்கு ரூ.25 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

டெல்லி கலால் கொள்கை தொடர்புடைய முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் அமலாக்கத்துறையால் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். இதனைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட அம்மாநில அமைச்சர் சவுரப் பரத்வாஜ் உள்ளிட்ட ஆம் ஆத்மி தொண்டர்களை போலீஸார் இன்று கைது செய்தனர்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சவுரப் பரத்வாஜ் கூறியதாவது: எந்த ஆதாரமும் இல்லாமல் கைது செய்யப்பட்டுள்ள கேஜ்ரிவாலின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மீண்டும் மீண்டும் கூறப்பட்டு வருகிறது.
கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு மருந்து நிறுவனம், கடந்த 2022 நவம்பரில் பாஜகவுக்கு ரூ.25 கோடி தேர்தல் பத்திரங்களைச் செலுத்தியது. எனவே, இந்த கலால் வழக்கில் பணப் பரிமாற்றமும், குற்றத்தின் வருமானமும் பாஜகவுக்குச் செல்கின்றன.
ஆம் ஆத்மி மற்றும் கேஜ்ரிவாலுக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டுள்ளபடி, பணப்பரிமாற்றமோ அல்லது குற்ற நடவடிக்கைகளோ இல்லை. கேஜ்ரிவால் கைது செய்யப்பட்ட விதம் மனிதாபிமானமற்றது. வயதான பெற்றோர் உள்ளிட்ட முதல்வரின் குடும்ப உறுப்பினர்கள், நேற்று மாலை முதல் தங்கள் உறவினர்களையோ ஆம் ஆத்மி தலைவர்களையோ சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
