பெங்களூரு நகரின் முக்கிய பகுதியில் உள்ள நகைக்கடையில் இன்று பட்டப்பகலில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு, கோடிகேஹள்ளியில் உள்ள நகைக்கடை இயங்கி வருகிறது. இந்த நகைக்கடை உரிமையாளர்கள் அப்புராம் மற்றும் அபிராம் இன்று காலை கடைக்குள் அமர்ந்திருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் கடைக்குள் நுழைந்தனர். அவர்கள் துப்பாக்கி முனையில் உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டினர். உரிமையாளர்கள் பணம் கொடுக்க மறுத்ததால், இருவரையும் சுட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்தபோது ரத்தவெள்ளத்தில் கிடந்த கடை உரிமையாளர்களை மீட்டு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக கோடிகேஹள்ளியில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

துப்பாக்கி சூடு
உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், மர்ம நபர்கள் விட்டுச்சென்ற துப்பாக்கியை கைப்பற்றினர். சம்பவம் தொடர்பாக கடையில் இருந்த சிசிவிடி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தப்பிச்சென்றவர்கள் தொடர்பான ஆதாரங்களை திரட்டிவருகின்றனர்.

பெங்களூரு மாநகர கமிஷனர் தயானந்த்
பட்டப்பகலில் நடந்த இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக பெங்களூரு மாநகர கமிஷனர் தயானந்த் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஏற்கெனவே கடந்த 1ம் தேதி பிரபல உணவகத்தில் நடந்த வெடிகுண்டு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நகரின் முக்கிய இடங்களில் அடுத்தடுத்து நடக்கும் குற்ற சம்பவங்கள் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

No comments