மும்பை: “உங்களை அவமானப்படுத்தினால், பா.ஜ.,வை விட்டு வெளியேறுங்கள். எங்களுடன் வந்து சேருங்கள். அதிகாரமிக்க மத்திய அமைச்சர் பதவி தருகிறோம்” என மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு மஹா., முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே அழைப்பு விடுத்துள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் நிதின் கட்கரி. இவர் மத்திய அமைச்சராக உள்ளார். இவருக்கு சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது.
பா.ஜ., முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில் மூத்த தலைவர்கள் பலரது பெயர் இடம் பெற்றிருந்தது. ஆனால், நிதின் கட்கரி பெயர் இடம் பெறவில்லை. அவருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், மஹா., முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியதாவது: நீங்கள் பா.ஜ., கட்சியால் அவமதிக்கப்பட்டால் மகா விகாஷ் அகாதி (உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ்) கூட்டணிக்கு வந்து விடுங்கள். உங்களுடைய வெற்றியை நாங்கள் உறுதி செய்வோம். நாங்கள் அரசு அமைத்த பிறகு உங்களுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்குவோம்.
அது அதிகாரமிக்க பதவியாக இருக்கும். இதை இரண்டு நாட்களுக்கு முன்பே கட்கரியிடம் கூறியிருந்தேன். மீண்டும் மீண்டும் சொல்கிறேன். உங்களை அவமானப்படுத்தினால், பா.ஜ.,வை விட்டு வெளியேறுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

கமெண்ட்ஸ் செய்ய விரும்பவில்லை