ராஜஸ்தான்: இந்திய விமானப்படைக்கு சொந்தமான இலகுரக போர் விமானம் (எல்சிஏ) செவ்வாய்க்கிழமை பிற்பகல் ராஜஸ்தானின் ஜெய்சால்மர் அருகே விழுந்து நொறுங்கியது. செயல்பாட்டு பயிற்சியின் போது இந்த விபத்து நடந்துள்ளது. விபத்துக்கான காரணத்தை கண்டறிய நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜெய்சால்மரில் உள்ள ஜவஹர் காலனி பகுதியில் விமானம் திடீரென விழுந்து நொறுங்கியது. உடனடியாக உள்ளூர் போலீசாரும், நிர்வாக அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இந்த விபத்தில் விமானி காயம் ஏதுமின்றி உயிர் தப்பினார்.
இந்திய விமானப்படை அறிக்கை
இந்த விபத்து குறித்து இந்திய விமானப்படை தகவல் அளித்துள்ளது. “இந்திய விமானப்படையின் தேஜாஸ் விமானம் ஒன்று ஜெய்சால்மரில் இன்று செயல்பாட்டு பயிற்சியின் போது விபத்துக்குள்ளானது. விமானி பத்திரமாக வெளியேற்றப்பட்டார். விபத்துக்கான காரணத்தை கண்டறிய நீதிமன்ற விசாரணை அமைக்கப்பட்டுள்ளது” என்று விமானப்படை தெரிவித்துள்ளது.
