புதுடில்லி : நிர்வாகத்தை மேம்படுத்தும் வகையிலும், திறமைசாலிகளை பயன்படுத்திக்கொள்ளவும் முக்கிய துறைகளில் 25 தனியார் துறை நிபுணர்களை நியமிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
வழக்கமாக மத்திய அரசின் கூடுதல் செயலர், இணைச்செயலர், துணை செயலர் மற்றும் இயக்குநர் பதவிகளில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அதிகாரிகளை நியமிப்பது வழக்கம். கடந்த 2018 ம் ஆண்டு முதல் புதிய திறமையாளர்களை அரசில் இணைக்கும் நோக்கத்தில் ‛லேட்டரல் என்ட்ரி’ முறையில் தனியார் துறை நிபுணர்களை இணைச் செயலர், துணை செயலர் மற்றும் இயக்குநர் பதவிகளில், மத்திய அரசு பணியமர்த்தி வருகிறது. இதன் மூலம் அவர்களும் அரசில் ஒரு அங்கமாக மாறுவதுடன், அரசின் கொள்கை முடிவுகளிலும் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
கடந்த 2018 ம் ஆண்டில் தனியார் துறை நிபுணர்களை நியமிக்க 10 கூடுதல் செயலர் பதவிகளுக்கான விண்ணப்பத்தை மத்திய அரசு வெளியிட்டது. இதற்கான நியமனங்கள் யுபிஎஸ்சி மூலம் மேற்க்கொள்ளப்பட்டது. இவர்களுக்கான பதவிக்காலம் 3 ஆண்டுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.
2021ல் இணைச் செயலர்கள் (3), இயக்குநர்கள்(19) மற்றும் துணைச் செயலர்கள்(9) பதவிகளுக்கு யுபிஎஸ்சி மூலம் தனியார் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் நியமிக்கப்பட்டனர். தற்போது மத்திய அரசின் இணைச் செயலர்(10), இயக்குநர் (28) பதவிகளில் தனியார் துறையைச் சேர்ந்த 38 பேர் நியமிக்கப்பட்டனர். அதில் 2 பேரின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது. தற்போது 33 பேர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், முக்கிய துறைகளில் தனியார் துறையைச் சேர்ந்த 25 பேரை நியமிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. 3 இணைச்செயலர்கள், 22 இயக்குநர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், இதற்கு பிரதமர் மோடி தலைமையிலான நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவைக்குழு ஒப்புதல் வழங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

