பிரதமர் மோடி ஆட்சி பொறுப்பேற்று வரும் மே 30-ம் தேதியுடன் 9 ஆண்டுகள் நிறைவடையவிருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சி நேற்று பிரதமரிடம் 9 கேள்விகளை எழுப்பியிருக்கிறது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தின் போது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “9 சாள் 9 சவால்” (9 ஆண்டுகள் 9 கேள்விகள்) என்ற தலைப்பில் ஒரு ஆவணத்தை வெளியிட்டார்.

அதைத் தொடர்ந்து,“ பிரதமர் மோடி ஆட்சிப் பொறுப்பேற்று 9 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதை பா.ஜ.க கொண்டாடத் தொடங்கும்முன்னர், காங்கிரஸ் கட்சி பிரதமரிடம் 9 கேள்விகளை முன்வைக்கிறது. இந்த கேள்விகளுக்கு பிரதமர் மோடி மௌனம் கலைக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டு 9 கேள்விகளை முன்வைத்தார். அவை….
1.பொருளாதாரம்: இந்தியாவில் பணவீக்கமும் வேலையின்மையும் ஏன் உயர்ந்து வருகிறது? பணக்காரர்கள் பணக்காரர்களாகவும், ஏழைகள் ஏழைகளாகவும் மாறியது ஏன்? பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து வரும் நிலையில், பொதுச் சொத்துக்கள் பிரதமர் மோடியின் நண்பர்களுக்கு மட்டும் விற்கப்படுவது ஏன்?

2. விவசாயம் மற்றும் விவசாயிகள்: மூன்று விவசாயம் தொடர்பான சட்டங்களை ரத்து செய்யும் போது விவசாயிகளுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் ஏன் மதிக்கப்படவில்லை? குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஏன் சட்டபூர்வமாக உத்தரவாதம் அளிக்கப்படவில்லை? கடந்த 9 ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானம் ஏன் இரட்டிப்பாகவில்லை?
3. ஊழல் மற்றும் நண்பர்களுக்கு மட்டும் உதவும் போக்கு: உங்கள் நண்பர் அதானிக்கு பயனளிக்கும் வகையில் எல்.ஐ.சி மற்றும் எஸ்.பி.ஐ-யில் மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த சேமிப்பை ஏன் பணயம் வைத்தீர்? மோசடி செய்த திருடர்களை ஏன் தப்பிக்க விட்டீர்? பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பரவி வரும் ஊழலைப் பற்றி நீங்கள் ஏன் வாய்திறப்பதில்லை? மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் இந்த நடவடிக்கைகளால் ஏன் இந்தியர்களை கஷ்டப்பட வைக்கிறீர்கள்?

4. சீனாவும் தேசியப் பாதுகாப்பும்: 2020-ல் சீனாவுக்கு நீங்கள் க்ளீன் சிட் கொடுத்த பிறகும், அவர்கள் இந்தியப் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது ஏன்? சீனாவுடன் உங்கள் ஆட்சியில் இதுவரை 18 சந்திப்புகள் நடத்தப்பட்டிருக்கின்றன, ஆனால் அவர்கள் ஏன் இந்திய நிலப்பரப்பைக் கொடுக்க மறுத்து, அதற்குப் பதிலாக தங்கள் ஆக்கிரமிப்பு தந்திரங்களைத் தொடர்கிறார்கள்?
5. சமூக நல்லிணக்கம்: தேர்தல் ஆதாயங்களுக்காக வேண்டுமென்றே வெறுப்பு அரசியலைப் பயன்படுத்தி சமூகத்தில் அச்சச் சூழலைத் தூண்டுவது ஏன்?
6. சமூக நீதி: உங்கள் அடக்குமுறை அரசு ஏன் சமூக நீதியின் அடித்தளத்தை அழிக்கிறது? பெண்கள், பழங்குடியினர், சிறுபான்மையினருக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து ஏன் மௌனமாக இருக்கிறீர்கள்? சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை ஏன் புறக்கணிக்கிறீர்கள்?

7. ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி: கடந்த ஒன்பது ஆண்டுகளில் நமது அரசியலமைப்பு விழுமியங்களையும் ஜனநாயக அமைப்புகளையும் ஏன் பலவீனப்படுத்தினீர்கள்? எதிர்க்கட்சிகள் மற்றும் தலைவர்களை பழிவாங்கும் அரசியலை ஏன் செய்கிறீர்கள்? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சீர்குலைக்க ஏன் அப்பட்டமான பண பலத்தை பயன்படுத்துகிறீர்கள்?
8. நலத்திட்டங்கள்: ஏழைகள், பழங்குடியினர் நலனுக்கான திட்டங்கள் அவர்களின் பொருளாதாரத்தைக் குறைத்து, கட்டுப்பாடு விதிகளை உருவாக்குவதன் மூலம் பலவீனப்படுத்தப்படுவது ஏன்?

9. கோவிட்-19: கோவிட்-19 காரணமாக 40 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பரிதாபமாக இறந்தாலும், அவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க உங்கள் அரசு மறுப்பது ஏன்? கொரோனா பரவலின் போது வெளிமாநிலங்களில் வேலை செய்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வீடு திரும்ப அவகாசாம் அளிக்காமல் ஊரடங்கை அறிவித்தது ஏன்? மேலும், அவர்களுக்கு எந்த உதவியும் வழங்கவில்லையே ஏன்?
பாரத் ஜோடோ யாத்திரையின் போதும் அதற்குப் பின்னரும் ராகுல் காந்தி இந்த 9 கேள்விகளை தொடர்ச்சியாக எழுப்பினார், ஆனால் இன்றுவரை எந்தப் பதிலும் வரவில்லை… பிரதமர் இந்த கேள்விகளுக்கு தனது மௌனத்தைக் கலைக்க வேண்டிய நேரம் இது” எனத் தெரிவித்திருக்கிறார்.

அதைத் தொடர்ந்து, காங்கிரஸின் மூத்த தலைவர் பவன் கேரா, “பிரதமர் அவரின் செயல்களுக்காக இன்று மன்னிப்பு தினத்தை கொண்டாட வேண்டும்… அவர் அனைத்து இந்தியர்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்… அவருடைய வாக்குறுதிகள் அனைத்தும் கற்பனையானவை” எனக் கூறினார்.
காங்கிரஸின் குற்றச்சாட்டுகளுக்கு பா.ஜ.க எம்.பி ரவி சங்கர் பிரசாந்த் மறுப்பு தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது,”காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, இந்தியப் பகுதியை சீனர்கள் கைப்பற்றினர். பா.ஜ.க ஆட்சியில் கிழக்கு லடாக்கில் அண்டை நாட்டின் ராணுவத்துடனான மோதலின்போது, நாடு தனது வலிமையைக் காட்டியது.

கடந்த 2 நாடாளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. 2024-ம் ஆண்டும் இதேபோன்ற கதியை காங்கிரஸ் சந்திக்கும். அரசுக்கு எதிராக ‘கோவிட் தவறான நிர்வாகம்’ என்ற காங்கிரஸின் குற்றச்சாட்டு வெட்கமின்மையின் உச்சம். கொரோனா பரவலின் போது காங்கிரஸ் தலைவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.
2014-ம் ஆண்டில் பா.ஜ.க அரசு பதவியேற்றபோது, இந்தியாவின் பொருளாதாரத்தின் அளவு 1 டிரில்லியன் டாலராக இருந்தது. இப்போது அது கிட்டத்தட்ட 3.5 டிரில்லியன் டாலராக அதிகரித்திருக்கிறது. நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ரூ. 50 லட்சம் கோடிக்கு மேல் இருக்கிறது. அதே சமயம் ஏற்றுமதி கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்து ரூ.36 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது. சில்லறை பணவீக்கம் இப்போது 4.7 சதவீதமாக இருக்கிறது. அதே நேரத்தில் முழு பணவீக்கம் எதிர்மறையாக இருக்கிறது.

அமெரிக்காவில் பணவீக்கம் 8.9 சதவிகிதமாகவும், பிரான்சில் 17.5 சதவிகிதமாகவும், ஜெர்மனியில் 23.5 சதவிகிதமாகவும் இருப்பதையும் கவனிக்க வேண்டும். 2004-14 க்கு இடையில் நடந்த 10 ஆண்டுகள் ஆட்சியில் நிலம், காற்று மற்றும் நீர் என அனைத்து துறைகளிலும் ஊழல் நிறைந்திருக்கிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் ஊழல் குறித்து கேள்விகள் கேட்பது அதிர்ச்சியளிக்கிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.

