போதைப் பொருட்களின் (Drug Trafficking) நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் பொம்மை முதல்-அமைச்சரின் கீழ் செயல்படும், தமிழக காவல்துறை தோல்வி அடைந்துள்ளது என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது..
“நான் எத்தனையோ முறை அறிக்கைகள் வாயிலாகவும், சட்டப்பேரவையிலும், பொது நிகழ்ச்சிகளிலும் இந்த விடியா தி.மு.க. ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளையும், தமிழகம் போதைப் பொருள் கேந்திரமாக மாறிவருதையும் ஆக்கப்பூர்வமான பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவராக சுட்டிக்காட்டி வருகிறேன்.
தமிழகம் முழுவதும் மூலை, முடுக்கெங்கும் கஞ்சா, பவுடர், மாத்திரை மற்றும் ஸ்டாம்ப் வடிவிலும், கேட்டமின், கொக்கேய்ன் என்று பல வகைகளிலும் போதைப் பொருட்கள் (Drug Trafficking) தட்டுப்பாடின்றி கிடைப்பதால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், இளம் வயதிலேயே போதைக்கு அடிமையாகி குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதை ஊடகங்களும், நாளிதழ்களும் தினமும் செய்திகளாக வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில் முன்னாள் காவல்துறை தலைவர் ‘ஆபரேஷன் கஞ்சா 0.1, 0.2, 0.3, 0.4’ என்று போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை தொடர்கிறது என்று கூறிய நிலையில், விடியா தி.மு.க. அரசு பொறுப்பேற்று 32 மாத கால ஆட்சிக்குப் பிறகும், இதுபோன்ற போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் கைது, போதைப் பொருட்கள் பறிமுதல் என்ற செய்திகள் மட்டும் வருகின்றன.
போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள ஆணி வேரை கண்டுபிடிக்க முடியாமல் தமிழக காவல்துறை திணறி வருவதையும், போதைப் பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் பொம்மை முதல்-அமைச்சரின் கீழ் செயல்படும் தமிழக காவல்துறை தோல்வி அடைந்ததையே இது காட்டுகிறது.
தி.மு.க.-வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணியின் துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக், அவரது சகோதரர்கள் மைதீன் மற்றும் சலீம் ஆகியோருடன் இணைந்து இந்தக் கடத்தலில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமாகி உள்ளது என்றும், இந்த கடத்தல் சம்பந்தமாக அவர்களைத் தேடி வருவதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது என்றும், சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடைபெற்று இருப்பதால் அமலாக்கத் துறையினரும் விசாரணையைத் தொடங்கி உள்ளனர் என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தலைமறைவாகி உள்ள மூன்று பேரையும் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் தேடி வரும் நிலையில், தி.மு.க.-வைச் சேர்ந்த பலரும் சிக்குவார்கள் என்று கூறப்படுவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
உதயநிதி ஸ்டாலின் மனைவி ‘கிருத்திகா உதயநிதி’ இயக்கத்தில் இம்மாதம் வெளியான ‘மங்கை Travel of Women’ என்ற படத்தைத் தயாரித்தவர் இந்த ஜாபர் சாதிக் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. நிர்வாகத் திறனற்ற பொம்மை முதல்-அமைச்சரின் கீழ் செயல்பட்டு வரும் தமிழக காவல்துறை, உடனடியாக இந்ந நபரின் பின்னணி மற்றும் முழு விவரங்களையும், இதுபோல் யாரேனும் போதைப் பொருள் கடத்தலில் சம்பந்தப்பட்டுள்ளனரா என்பதையும், மத்திய போதைப் பொருள் தடுப்புக் காவல்துறையினருடன் இணைந்தோ அல்லது தனித்தோ புலன் விசாரணை செய்து, அவர்களை சட்டத்தின்முன் நிறுத்தி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அதிமுக நிர்வாகிகளின் செயல்பாடு என்ன சூப்பராவா இருக்கு