நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்காக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே தமிழ்நாட்டில் தேர்தல் களம் பரபரப்பான சூழலை அடைந்துள்ளது.
இந்நிலையில், பாஜக எம்எல்ஏ சரஸ்வதி இன்று அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே போன்ற தகவல் வெளியான நிலையில், அப்போது மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவரின் மருமகனான ஆற்றல் அசோக்குமார், மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக களமிறங்கவிருப்பதாக கூறப்படும் நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது. மேற்கூறிய தகவலை அதிமுக நிர்வாகிகள் சிலர் கசிய விட்டு வருகின்றனர்.
