புதுடில்லி: ராஜஸ்தானில் இருந்து காலியாகும் ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு காங்., மூத்த தலைவர் சோனியா போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.
இன்னும் ஓரிரு மாதங்களில் (2024) லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தனது ரேபரேலி லோக்சபா தொகுதியில் போட்டியிடுவதற்கு பதிலாக மகள் பிரியங்காவுக்கு விட்டு கொடுக்க சோனியா முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் ராஜஸ்தானில் இருந்து காலியாகும் பதவிக்கு சோனியா போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக டில்லியில் இருந்து ஜெய்ப்பூருக்கு சோனியா வந்தார். அவருடன் ராகுல், பிரியங்காவும் உடன் வந்தனர்.
தொடர்ந்து, தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் சோனியா, ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது, முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், பிரியங்கா, ராகுல் மற்றும் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

