
சமீபத்தில் பஞ்சாப் மாநில சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தலில் தேர்தல் அதிகாரி வாக்கு சீட்டுகளை முறைகேடாக சிதைத்து 8 வாக்குகளை செல்லாத வாக்குகள் என்று அறிவித்தார், இதனால் பாஜக வெற்றிபெற்றது. அந்த வாக்கு சீட்டுகளை தேர்தல் அதிகாரி அவ்வாறாக சிதைக்காமல் இருந்திருந்தால் INDIA கூட்டணி வெற்றிபெற்றிருக்கும். இந்த தேர்தல் அதிகாரி வாக்கு சீட்டுகளை முறைகேடாக சிதைக்கும் CCTV வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து ஆளும் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு. சந்திரசூட் அவர்கள் கூறியதாவது ..தேர்தல் அதிகாரி வாக்குச் சீட்டுகளை சிதைத்துள்ளார் என்பது வெளிப்படையாக தெரிகிறது. அவர் தேர்தல் நடத்தும் முறை இப்படியா? இது ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்குவது. இது ஜனநாயகத்தின் கொலை. இந்த நபர் மீது வழக்குத் தொடர வேண்டும்,” என்கிறார்.
மேயர் தேர்தலின் முழுப் பதிவேடுகளும் வரிசைப்படுத்தப்பட்டு, பதிவாளர் ஜெனரல் மற்றும் வாக்குச் சீட்டுகள் மற்றும் வீடியோ பதிவுகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், அதை நீதிமன்றத்திற்கு சமர்பிக்க வேண்டும் என்றும் கூறினார்.
”சொலிசிட்டர் ஜெனரல் அவர்களே போய் அந்த தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் சொல்லுங்கள் உச்சநீதிமன்றம் அவரை பார்த்துக் கொண்டிருக்கிறது” என்று என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தனது கடும் கோபத்தை வெளிப்படுத்தினார்.
இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் முறையான இடைக்கால உத்தரவை பிறப்பிக்க தவறிவிட்டது. தேர்தல் நடத்தும் அதிகாரி கேமராவைப் பார்த்துக்கொண்டு ஒரு திருடனைப் போல ஏன் செயல்படுகிறார்? இவ்விவகாரத்தில் எங்களது அனைத்து சந்தேகங்களுக்கும் பதிலளிக்க வேண்டும். பதில் திருப்தி அளிக்கவில்லை என்றால் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் மேயர் தேர்தல் நடத்தப்பட்ட அனைத்து வீடியோ பதிவுகளையும் பாதுகாக்க வேண்டும். அடுத்த உத்தரவு வரும் வரை சண்டிகர் மாநகராட்சி கூட்டம் நடத்தக் கூடாது என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

