
‘Comedy is a serious Business’ என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுவதுண்டு. பார்வையாளர்களின் உணர்வுகளைத் தூண்டி அந்த உணர்வுகள் ஒரே புள்ளியில் குவியும்போது அவர்களை அழவைத்து விடலாம். ஆனால் தாம் சொல்லவந்த அல்லது செய்ய நினைத்த நகைச்சுவையை பார்வையாளருக்கு புரியவைத்து அந்த நொடிப்பொழுதில் சிரிக்கவைப்பது ஒரு கலைஞனுக்கு எளிதல்ல. அப்படி தனக்கென ஒரு பாதையை வகுத்து ஒரு தலைமுறையையே சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த திரைக் கலைஞர் கவுண்டமணியின் பிறந்தநாள் இன்று (மே 25). அவர் குறித்த 15 குறிப்புகள்:
- கவுண்டமணியின் இயற்பெயர் சுப்பிரமணியன். உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள கிராமம் ஒன்றில் பிறந்து நாடகங்களின் வழியாகத் திரைத்துறைக்கு வந்தவர். அவர் திரையில் தலைகாட்டத் தொடங்குவதற்கு முன்பே திருமணமாகி இரண்டு குழந்தைகள் பிறந்துவிட்டனர்.
- 1970இல் வெளியான 'ராமன் எத்தனை ராமனடி' கவுண்டமணியின் முதல் படமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆனால் அதற்கு முன்பே 'சர்வர் சுந்தரம்', 'ஆயிரத்தில் ஒருவன்' போன்ற படங்களில் அவர் கூட்டத்தில் ஒருவராகத் திரையில் தோன்றியிருக்கிறார்.
- நண்பர்களிடையே பேசும்போது இடையிடையே ஓஷோவின் மேற்கோள்களை குறிப்பிடுவது கவுண்டமணியின் வழக்கமாம். ‘பார்த்தால் காமெடியன், படிப்பில் அறிவாளி’ என்று கவுண்டமணி குறித்து நடிகரும் இயக்குநருமான மணிவண்ணன் அடிக்கடி குறிப்பிடுவார்.
- 16 வயதினிலே படத்தில் ‘சுப்பிரமணியன்’ என்ற பெயரை ’கவுண்டமணி’ என்று மாற்றியவர் பாரதிராஜா.
- 'கரகாட்டக்காரன்' படத்தில் இடம்பெற்ற 'வாழைப்பழ' காமெடி உலகப் புகழ் பெற்றது. அதன் பிறகு கவுண்டமணி-செந்தில் இணை தமிழ் சினிமாவின் தலைசிறந்த நகைச்சுவை இணையாக உருவெடுத்தது. கவுண்டமணி – செந்தில் கூட்டணி இணைந்து 450 படங்களுக்கு மேல் நடித்துள்ளனர்.


