ராஞ்சி: அமலாக்கத்துறை தன்னை கைது செய்ததை கண்டித்து உச்சநீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்துள்ள மனுவை விசாரிக்க மறுத்த நீதிபதிகள், ஜாமின் கோரி ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தினர்.
ஜார்க்கண்டில் போலி ஆவணங்கள் வாயிலாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை அபகரித்ததாக ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் மீது எழுந்த குற்றச்சாட்டில் சட்ட விரோத பணப் பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஹேமந்த் சோரனை கைது செய்தனர். முன்னதாக அவர் கவர்னரை சந்தித்து ராஜினாமா செய்திருந்தார்.
இந்நிலையில் தன்னை அமலாக்கத்துறை கைது செய்தது சட்டவிரோதம் எனவும், உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் தரப்பு வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, சுந்தரேஷ், பெல்லா திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (பிப்.,2) விசாரித்தது. அப்போது, வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்தது. மேலும், ஜாமின் கோரி ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்திற்கு ஏன் செல்வில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தை நாடுமாறு அறிவுறுத்தினர்.
வாதத்தின்போது, உயர்நீதிமன்ற விசாரணைக்கு கால நிர்ணயம் செய்ய வேண்டும் என சோரன் தரப்பு விடுத்த கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். ஜாமின் மனுவை விரைந்து விசாரிக்க ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

